கிளிநொச்சி பார் பெர்மிட்டில் ஒன்று விக்கியின் சிபாரிசில் வழங்கப்பட்டது.

கிளிநொச்சியில் வழங்கப்பட்டுள்ள பார் (மதுபானச்சாலை) பெர்மிட்டுகளில் ஒன்று தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரனின் கோட்டாவில் வழங்கப்பட்டுள்ளமை அம்பலமாகியுள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்தின் கரடிப்போக்குச் சந்தியில் ஏ – 9 வைன் ஸ்ரோர் எனும் பெயரில் இயங்கும் மதுபானசாலைக்கான அனுமதி வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் ஊடாகப் பெற்றமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

சி.வி.விக்னேஸ்வரன் 2024.02.19 அன்று எழுத்து மூலம் வழங்கிய கடிதத்தின் அடிப்படையிலேயே இந்த மதுபானசாலைக்கான அனுமதி அப்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஊடாக வழங்கப்பட்டுள்ளது.

தனுசா நடராசா என்னும் பெயரில் இந்த மதுபானசாலைக்காக விக்னேஸ்வரன் பரிந்துரைத்துள்ளார்.

“இவ்வாறு உங்கள் பெயரில் இந்த மதுபானசாலை வழங்கப்பட்டுள்ளதே!” – என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவருமான சி.வி.விக்னேஸ்வரனைத் தொடர்புகொண்டு கேட்டபோது, “அந்த மதுபானசாலை அனுமதியை தாய், தந்தை அற்ற ஒரு பெண்மணிக்கே பெற்றுக்கொடுத்தேனே அன்றி நான் எடுக்கவில்லை.” – என்று பதிலளித்தார்.

ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சிக் காலத்தில் 172 மதுபானசாலைகளுக்கான அனுமதிகள் வழங்கப்பட்டு அவை திறக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
……………..

Leave A Reply

Your email address will not be published.