மன்னார் ஆயர் இல்லமும் கொரோனாவால் முடக்கம்.

மன்னார் ஆயர் இல்லமும்
கொரோனாவால் முடக்கம்

மன்னார் ஆயர் இல்லம் ‘கொரோனா’ அச்சம் காரணமாக முழுமையாக மூடப்பட்டுள்ளது. ஆயர் இல்லத்துக்கான உட்செல்லும் அனுமதி மற்றும் வெளி செல்லும் அனுமதி அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளது.

குறித்த விடயம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

மன்னார் – பட்டித்தோட்டம் என்ற பகுதியில் கட்டடப் பணியில் ஈடுபட்ட தொழிலாளர்களில் ஒருவர் காய்ச்சல் மற்றும் இருமல் காரணமாக நேற்றுமுன்தினம் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்குச் சென்றபோது குறித்த நபருக்குப் பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதன்முடிவு நேற்றிரவு கிடைக்கப் பெற்றது.

அதற்கமைவாக குறித்த நபருக்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வெண்னப்புவ பகுதியைச் சேர்ந்த மன்னார் ஆயர் இல்லப் பகுதியில் கட்டட நிர்மாண வேலையில் ஈடுபட்டிருந்த நபருக்கே கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தநிலையில், குறித்த நபர் பணியாற்றிய மற்றும் நடமாடிய தொடர்புகளைப் பேணிய இடங்கள் மற்றும் நபர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

குறிப்பாகக் கட்டட நிர்மாணப் பணிகளை மேற்கொண்ட ஆயர் இல்லத்தில் கொரோனாத் தொற்று அபாயம் காணப்படலாம் எனும் அச்சத்தில் முழுப் பகுதியும் முடக்கப்பட்டுள்ளதுடன் தனிமைபடுத்தல் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அதேநேரத்தில் சம்பந்தப்பட்ட நபருடன் தொடர்புபட்டவர்கள் மற்றும் கொரோனா அச்சம் எனச் சந்தேகிக்கப்படுகின்ற பலருக்கு இன்று மேலதிக பி.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

Leave A Reply

Your email address will not be published.