முகநூலில் வந்த வெறுப்பு பதிவு! ஒடிசாவில் வெடித்த கலவரம்
ஒடிசா மாநிலத்தில் கடந்த சில நாள்களுக்கு முன்பு, முகநூலில் ஒரு சர்ச்சைக்குரிய பதிவு வெளியாகியுள்ளது. அது மற்றொரு தரப்பை வெறுப்படைய செய்துள்ளது. அதன் காரணமாக கலவரம் வெடித்துள்ளது.
இந்த கலவரத்திற்கு இரு காரணங்கள் சொல்லப்படுகின்றன. ஒன்று அந்த முகநூல் பதிவு வெளியாகி வைரலானதும், அதன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, பத்ரக் டவுன் காவல்நிலையத்தில் ஒரு தரப்பினர் புகார் கொடுத்துள்ளனர். ஆனால், அந்தப் புகாரை எடுக்க மறுத்ததால் காவல்நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதாகவும், அப்போது அங்கு இருந்தவர்கள் போலீஸார் மீது தாக்குதல் நடத்தியதாகவும் சொல்லப்படுகிறது.
அதேபோல் மற்றொரு காரணமாக, இந்த சர்ச்சைக்குரிய பதிவு வந்தத்தற்கு பிறகு ஒரு குழுவினர், பேரணி நடத்தி, சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு, அதில் டயர்களை கொளுத்தியதாகவும் சொல்லப்படுகிறது. அப்போது காவல்துறையினர் அவர்களை கலைந்து செல்ல சொன்னதாகவும் ஆனால், போராட்டக்காரர்கள் கலைந்து செல்லாமல் தொடர்ந்து போராடி போலீஸார் மீது கல்லெறிந்ததாகவும் சொல்லப்படுகிறது.
இந்த சம்பவத்தில் பத்ரக் எஸ்.ஐ. உட்பட ஐந்து காவலர்கள் காயமடைந்திருப்பதாக சொல்லப்படுகிறது. தற்போது இந்த விவகாரத்தில் ஒருவரை காவல்துறையினர் கைது செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதேபோல், கலவரம் தொடர்ந்து அதிகரித்துவிடக் கூடாது என்பதற்காக ஒடிசா மாநிலத்தில் இரு தினங்களுக்கு இணையச் சேவையை நிறுத்திவைப்பதாக மாவட்ட நிர்வாகம் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பில் கலவரம் இன்னும் பெரிசாகிவிடக்கூடாது என்பதற்காக அனைத்துவிதமான இணையச் சேவையையும் நிறுத்தி வைத்துள்ளதாக சொல்லப்படுள்ளது.