தேர்தல் நேரத்தில் கட்சியின் சின்னமாக யானையை தவெக பயன்படுத்த முடியாது – தேர்தல் ஆணையம்
தேர்தல் நேரத்தில் கட்சியின் சின்னமாக யானையை தவெக பயன்படுத்த முடியாது.
நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் கட்சியை ஆரம்பித்து தனது அரசியல் பயணத்தை தொடங்கியுள்ளார் . கடந்த மாதம் 22 ஆம் தேதி நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சிக் கொடி மற்றும் கட்சிப் பாடலை அறிமுகம் செய்தார்.
இதனையடுத்து வரும் அக்டோபர் 27 ஆம் தேதி தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் மாநில மாநாடும் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் த வெக கட்சி நிர்வாகிகள் முழு வீச்சில் செய்து வருகின்றனர். இதற்கிடையே, விஜய் தனது தமிழக வெற்றிக் கழக கொடியை அறிமுகம் செய்து வைத்தார்.
கட்சியின் கொடியில் வாகை மலருடன் இரண்டு போர் யானைகள் இடம் பெற்று இருந்தது. இதற்குப் பகுஜன் சமாஜ் கட்சி தங்கள் கட்சியின் சின்னத்தை விஜய், தனது கட்சியின் கொடியில் வைத்து இருப்பதாகக் குற்றம்சாட்டியிருந்தது.இது அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
மேலும் இது தொடர்பாகப் பகுஜன் சமாஜ் கட்சி கட்சி சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகாரளித்தது . இந்த நிலையில், பகுஜன் சமாஜ் கட்சியின் புகாருக்குத் தேர்தல் ஆணையம் பதிலளித்துள்ளது.
இது தொடர்பாகத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளதாவது: கட்சியின் கொடி விவகாரத்தில் தேர்தல் ஆணையம் தலையிடாது. தேர்தல் நேரத்தில் கட்சியின் சின்னமாக யானையை தவெக பயன்படுத்த முடியாது.
ஒரு கட்சியின் கொடிக்கு நாங்கள் ஒப்புதல், அங்கீகாரம் வழங்குவது இல்லை” என்று தெரிவித்துள்ளது.இதனால் தவெகவினர் உற்சாகம் அடைந்துள்ளனர்.