ரஜினிகாந்த் நேற்று இரவு சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதி.
ரஜினிகாந்த் (73), நேற்று (செப்டம்பர் 30) இரவு சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
உடல் நலக்குறைவு காரணமாக நேற்று இரவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் ரஜினிகாந்திற்கு இருதயத்தில் அடைப்பு இருப்பது கண்டறியப்பட்டு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சிகிச்சைக்கு பிறகு குடும்பத்தினருடன் ரஜினிகாந்த் நன்றாக பேசி வருவதாகவும், இன்று மாலை பொது வார்டுக்கு மாற்றப்படுவார் எனவும் மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகின்றன.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடல் நலக்குறைவு காரணமாக நள்ளிரவில் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வேட்டையன் படத்தில் நடித்து முடித்துள்ள ரஜினிகாந்த் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி திரைப்படத்தில் நடித்து வருகிறார். உற்சாகத்துடன் நடிகர் ரஜினிகாந்த் படப்பிடிப்பு தளத்தில் கலந்துகொண்டார்.
இந்த நிலையில் நேற்று விசாகப்பட்டிணத்தில் நடந்த கூலி படப்பிடிப்பில் கலந்துகொண்ட நடிகர் ரஜினிகாந்துக்கு நெஞ்சுவலியும் அடிவயிற்றில் வலியும் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அப்பல்லோ மருத்துவமனை மருத்துவர்களை தொடர்புகொண்டு ரஜினி பேசியதாகவும், இதன்பின்னர் நேற்று இரவு 10 மணியளவில் நடிகர் ரஜினிகாந்த் அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆனதாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து ரஜினிகாந்துக்கு இன்று காலை 6 மணியில் இருந்து 7 மணிக்குள் மூன்று விதமான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து இருதவியல் சிகிச்சை நிபுணர் சாய் சதீஷ் உள்பட 3 பேர் தலைமையில் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. குறிப்பாக ரஜினிகாந்திற்கு உணவு செரிமான பிரச்சினை, சிறுநீரக பிரச்சினை உள்ளதா என்று மருத்துவர்கள் பரிசோதனை செய்தனர். இதேபோல் இதயத்துக்கு செல்லும் ரத்த நாளத்தில் அடைப்பு ஏற்பட்டுள்ளதா? எனவும் மருத்துவர்கள் பரிசோதனை செய்தனர்.
முதலில் அடி வயிற்றில் வீக்கத்திற்கான சிகிச்சை அளிக்கப்பட்டது. இதையடுத்து சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டார். 4 மணி நேர பரிசோதனைக்கு பிறகு அவருக்கு ரத்த நாளத்தில் அடைப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து ரஜினிகாந்திற்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அறுவை சிகிச்சை எதுவும் செய்யப்படவில்லை. ஆஞ்சியோ செய்யப்பட்ட பிறகு இருதவிய அறுவை சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார்.
சுமார் அரை மணி நேரம் மயக்கத்தில் இருந்ததாகவும், அதன்பின்னர் கண்விழித்த ரஜினிகாந்த் மருத்துவர்களிடம் சிரித்து பேசியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மருத்துவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். தொடர்ந்து குடும்பத்தினருடனும் ரஜினிகாந்த் பேசி வருகிறார். தற்போது எழுந்து, நடந்து செல்லும் அளவுக்கு உடல்நலத்துடன் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக இன்று அவர் சாதாரண வார்டுக்கு மாற்றப்படலாம் என்று கூறப்படுகிறது.
இன்று இரவு அல்லது நாளை ரஜினிகாந்த் டிஸ்சார்ஜ் செய்யப்படலாம் என்றும் ஆஸ்பத்திரி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நடிகர் ரஜினிகாந்த் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டதும் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். ஆனால் தற்போது ரஜினிகாந்த் நல்ல உடல்நலத்துடன் இருக்கும் தகவல் அறிந்து பலரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.