மதுபானசாலையை உடனடியாக மூட மதுவரி ஆணையாளர் உத்தரவு.
மன்னார், தலைமன்னார் பிரதான வீதி, எழுத்தூர் சந்திக்கு அருகாமையில் புதிதாக திறக்கப்பட்டுள்ள மதுபானநிலையத்தை மக்களின் எதிர்ப்பு காரணமாக தற்காலிகமாக மூடுமாறு மதுவரித் திணைக்கள ஆணையாளர் எழுத்தில் உத்தரவிட்டுள்ளார்.
குறித்த மதுபான நிலையத்திற்கெதிராக நேற்றைய தினம் (30.09)மக்கள், போராட்டமொன்றை மேற்கொண்டிருந்தனர்.
இந்த மதுபான நிலையத்திற்கருகாமையில் மக்கள் குடியிருப்பு , ஆடைத்தொழிற்சாலை,இளைஞர் பயிற்சி நிலையம், பள்ளிவாசல் ஆகியவை அமைந்துள்ளமையால் மக்கள் இந்த மதுபான நிலையத்தை அமைக்க வேண்டாமென பல்வேறு வகையில் எதிர்ப்பைத் தெரிவித்தும் குறித்த மதுபான விற்பனை நிலையம் திறக்கப்பட்டுள்ள நிலையில், நேற்றைய தினம் பெருமளவிலான மக்கள், பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியபடி போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இதன்போது, சம்பவ இடத்துக்கு வருகை தந்த
மன்னார் பிரதேச செயலாளர் எம்.பிரதீப், மற்றும் மன்னார் மாவட்ட அரச அதிபர் க.கனகேஸ்வரன் ஆகியோர் மக்களுடன் கலந்துரையாடியபின்னர் மக்கள் போராட்டத்தைக் கைவிட்டுச் சென்றனர்.
இந்தப் பிரச்சினை தொடர்பாக அரச அதிபர் உடனடியாக மதுவரித் திணைக்களத்தின் கவனத்துக்குக் கொண்டு
சென்ற நிலையில் குறித்த மதுபான நிலையத்தைத் தற்காலிகமாக மூடுமாறு பணிக்கப்பட்டுள்ளது.
அதே நேரம் நிரந்தர தீர்வு கோரி ஜனாதிபதியின் கவனத்துக்குக் கொண்டு சென்று மதுபான நிலையத்தை நிரந்தரமாக
மூடுவதற்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.