காலி முகத்திடலில் நிறுத்தப்பட்டுள்ளவை முன்னாள் ஜனாதிபதியின் வழமையான ஊழியர்களின் வாகனங்கள் அல்ல, தனியார் ஊழியர்கள் பயன்படுத்திய வாகனங்கள்… ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு!
ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக தற்போது 107 வாகனங்கள் காட்சிப்படுத்துவதற்காக அல்ல, அலுவலக வளாகத்தில் இடப்பற்றாக்குறை காரணமாக நிறுத்தப்பட்டுள்ளதாகவும், அந்த வாகனங்களை அத்தியாவசிய சேவைகள் தேவையின் அடிப்படையில் விரைவில் விநியோகிக்குமாறும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
இந்த வாகனங்கள் ஜனாதிபதி செயலகத்தின் வழமையான ஊழியர்களுக்கு வழங்கப்படும் வாகனங்கள் அல்ல எனவும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
குறித்த 107 வாகனங்களும் முன்னாள் ஜனாதிபதியினால் அரசியலமைப்பின் 41(1) பிரிவின் கீழ் நியமிக்கப்பட்ட தனது தனிப்பட்ட ஊழியர்களுக்கு அவரது பதவிக்காலத்தில் வழங்கப்பட்ட வாகனங்கள் எனவும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.