மூழ்கி முத்தெடுக்க வந்துள்ளேன்: ரியா சுமன்.

திரைக்கடலுக்குள் மூழ்கி முத்தெடுக்க திரையுலகில் அறிமுகமாகி எட்டு ஆண்டுகள் ஆனாலும் தான் இன்னும் பலவகை திறன்களையும் கற்கும் நிலையிலேயே இருந்து வருவதாகக் கூறுகிறார் நடிகை ரியா சுமன்.

பொதுவாக நதிபோல் ஓடிக்கொண்டிரு எனச் சொல்வார்கள். அதேபோல்தான் நானும் வாழ்ந்து வருகிறேன். வாழ்க்கையை ஒவ்வொரு நொடிப்பொழுதும் ரசித்து வாழ கற்றுக்கொண்டுள்ளேன் என்று சொல்கிறார் நடிகை ரியா சுமன்.

இவருக்குச் சிறு வயது முதலே நடிப்பின்மீது ஆர்வம் துளிர்விட ஆரம்பித்துவிட்டதாம்.

“பிறந்தது மும்பை, வளர்ந்தது ராஜஸ்தான், படித்தது வர்த்தகம். கல்லூரி நாள்களில் சில விளம்பரப் படங்களில் நடித்துள்ளேன். அதன்மூலம் ஆரம்பித்ததுதான் எனது திரையுலகப் பயணம்.

“சினிமாதான் வாழ்க்கை என முடிவெடுத்து திரைக்கடலுக்குள் மூழ்கி முத்தெடுக்க வந்துவிட்டேன்,” என்று கண் சிமிட்டுகிறார் ரியா சுமன்.

ஜீவா நடித்த ‘சீறு’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்குள் நுழைந்த இவர், தொடர்ந்து ‘மன்மத லீலை’, ‘மலேஷியா டூ அம்னீஷியா’, சந்தானத்துடன் ‘ஏஜென்ட் கண்ணாயிரம்’ உட்பட பல படங்களில் நடித்துள்ளார். இப்போது தெலுங்கு, இந்திப் படங்களிலும் பரபரப்பாக நடித்து வருகிறார்.

விஜய் ஆண்டனியுடன் இவர் இணைந்து நடித்துள்ள ‘ஹிட்லர்’ திரைப்படம் தற்போது திரையரங்குகளில் ஓடிக்கொண்டுள்ளது.

தனது தாய்மொழி இந்தி என்றாலும் தமிழ், தெலுங்கு என பல மொழிகளும் தனக்குத் தெரியும் என்று கூறும் ரியா சுமன், வார இதழ் ஒன்றுக்கு அளித்துள்ள நேர்காணலில் தனது திரை அனுபவம் குறித்து மனந்திறந்து பேசியுள்ளார்.

“உண்மையாகக் கூறப்போனால், விஜய் ஆண்டனி நிஜத்திலும் ஒரு நாயகன்தான். நாயகன் என்ற எந்த ஒரு பந்தாவும் இல்லாதவர். சினிமா குறித்து எனக்கு நிறைய விஷயங்களைச் சொல்லித் தந்தார். அக்கறையுடன் பார்த்துக்கொண்டார்.

“எல்லோருடைய சிந்தனைகளும் ஒன்றில்லை. எல்லோருக்கும் சுதந்திரம் இருக்கு” என்று விஜய் ஆண்டனி தத்துவமும் பேசுவார்.

“சினிமாவில் நடிப்பதற்கு முன் விளம்பரப் படங்களில் ஆர்வம் காட்டியதால் நடிப்பு பற்றிய எந்த ஒரு பதற்றமும் என்னிடம் இருந்ததில்லை.

“மும்பைக்கு வரும்போது வீட்டில் இருந்து படப்பிடிப்புத் தளம், படப்பிடிப்புத் தளத்தில் இருந்து வீடு என்றுதான் இருப்பேன். ஆனால், கோடம்பாக்கத்தில் அப்படியல்ல. படக்குழுவில் உள்ள அனைவரும் தங்கள் குடும்ப உறுப்பினர்களைப்போல் அன்பு செய்கிறார்கள். அது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது,” என்கிறார் ரியா சுமன்.

‘ரங்கீலா’, ‘பம்பாய்’, ‘அலைபாயுதே’ உட்பட பல படங்கள், தமிழ் மறுபதிப்பு படங்கள் என ஏராளமான படங்களைப் பார்த்துத்தான் எனது சினிமா அறிவை வளர்த்துக்கொண்டேன். அனுபம்கெர் நடிப்புப் பள்ளியில் படித்ததும் உதவியாக இருந்தது.

‘ஹிட்லர்’ படத்தில் அற்புதமான அனுபவம் கிட்டியது. தனாவின் இயக்கத்தில் அனுபவித்து நடிக்கமுடிந்தது.

விஜய் ஆண்டனி படப்பிடிப்புத் தளத்தில் மிகவும் அமைதியாக இருப்பார். ஆனால், மிகவும் நட்பாகப் பழகக்கூடியவர். பேசுவதற்கு இனிமையானவர்.

படப்பிடிப்பு நேரங்களில் பலர் தங்கள் சொந்த பிரச்சினைகளைச் சொல்ல வருவார்கள். அதை அழகாகக் கேட்டு எளிதாக முடித்துவிடுவார்.

‘ஹிட்லர்’ படத்தில் அவருடன் நடிப்பேன் என்று நினைத்துக்கூட பார்க்கவில்லை. அவருடன் சேர்ந்து நடித்த அனுபவம் மறக்கமுடியாதது. நான் சந்தித்த நல்ல பண்புகள் உள்ள மனிதர்களில் அவரும் ஒருவர்.

மொழிகளை வைத்து சினிமாவை பிரித்துப் பார்த்த காலம் இப்போது இல்லை. பெரும்பாலான நடிகர், நடிகைகளும் எல்லா மொழிகளிலும் நடிக்கிறார்கள். அப்படித்தான் எனக்கு இந்தி, தெலுங்கு, தமிழ் மொழிப் படங்களில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனாலும் எனக்கு மலையாளப் படத்தில் நடிக்கவேண்டும் என்ற ஆசை உள்ளது.

நகைச்சுவையாக நடிக்கவும் விரும்புகிறேன். நாயகியாகத்தான் நடிக்கவேண்டும் என்றில்லாமல் நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள பாத்திரங்களில் நடிக்க விரும்புகிறேன்.

‘அந்தாதூன்’ படத்தில் நடிகைகள் தபு, நயன்தாரா நடித்த பாத்திரங்கள், ‘ரங்கீலா’வில் ஊர்மிளா நடித்ததுபோல் நடிக்க ஆசையுள்ளது.

நடிகர் நானியுடன் தொழில்நுட்பம் குறித்த அம்சங்களை அதிகமாகப் பேசுவோம். சந்தானம் பற்றிச் சொல்லவே வேண்டாம். எப்பவும் நகைச்சுவையாகப் பேசிக்கொண்டே இருப்பார். சீரியசான பேச்சுக்கே இடமிருக்காது.

அண்மையில் நடந்த ‘தேவரா’ நிகழ்ச்சியில் ஜூனியர் என்டிஆர் பேசும்போது, “வெவ்வேறு மொழி பேசுபவர்களாக இருந்தாலும் சினிமா எல்லோரையும் ஒன்று சேர்த்துள்ளது,” என்றார். அதைத்தான் நானும் சொல்ல விரும்புகிறேன்.

பாலிவுட், கோலிவுட், டோலிவுட் என்று இந்தியத் திரையுலகைப் பிரித்துப் பார்த்த காலம் எல்லாம் மலையேறிப் போய்விட்டது. இப்போது அனைத்து நடிகர்களும் நடிக்கக்கூடிய ஒரே திரையுலகமாகத் தான் என் கண்களுக்குத் தென்படுகிறது.

“உன்னை நீ தெரிந்துகொள். சுயத்தை அறியும்போதுதான் உன் திறமைகள் வெளிப்படும்” என்று என்னுடைய அப்பா சொன்ன அறிவுரையைத்தான் இதுவரை நல்ல அறிவுரையாகப் பார்க்கிறேன்,” என்கிறார் ரியா சுமன்.

Leave A Reply

Your email address will not be published.