விஜய்யின் தமிழக வெற்றிக் கழக கொடியில் யானை சின்னம்: தேர்தல் ஆணையம் பதில்.
விஜய்யின் தமிழக வெற்றிக் கழக (தவெக) கொடியில் யானை சின்னம் இருப்பது தொடர்பாக, பகுஜன் சமாஜ் கட்சி அளித்த கடிதத்திற்கு இந்திய தேர்தல் ஆணையம் பதிலளித்துள்ளது.
தவெக கொடியில் இடம்பெற்றுள்ள தங்கள் கட்சி சின்னமான ‘யானை’ உருவத்தை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தோ்தல் ஆணையத்திடம் பகுஜன் சமாஜ் கட்சி கடிதம் அளித்திருந்தது.
நீலக் கொடியும் யானை சின்னமும் பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய அடையாளமாகும். சென்னையில் ஆகஸ்ட் 22ஆம் தேதி கட்சிக் கொடியை விஜய் அறிமுகம் செய்திருந்தார். அதில், தேசிய அங்கீகாரம் பெற்ற பகுஜன் சமாஜ் கட்சியின் சின்னமான யானை உருவம் இடம்பெற்றிருந்தது.
அங்கீகரிக்கப்பட்ட தேசிய கட்சியின் சின்னத்தை சட்டவிரோதமாக தம் கட்சிக் கொடியில் பயன்படுத்தியுள்ள விஜய் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தவெக கொடியில் உள்ள யானை உருவத்தை நீக்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணையத்துக்கு பகுஜன் சமாஜ் கட்சி எழுதிய கடிதத்தில் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், தவெக கொடியில் யானை சின்னம் பயன்படுத்தத் தடைவிதிக்கக் கோரி பகுஜன் சமாஜ் கட்சி எழுதிய கடிதத்திற்கு தேர்தல் ஆணையம் திங்கட்கிழமை (செப்டம்பர் 30) பதிலளித்தது.
அதில், “தமிழக வெற்றிக் கழக கொடி விவகாரத்தில் தேர்தல் ஆணையம் தலையிட முடியாது. கட்சிக் கொடிகளுக்கு உள்ளே இருக்கும் சின்னங்களுக்குத் தேர்தல் ஆணையம் எப்போதும் ஒப்புதல் அளிக்காது.
“பிற கட்சிகளின் சின்னங்களையும் பெயர்களையும் பிரதிபலிக்காமல் கொடி இருப்பதைக் கட்சிகள் உறுதிசெய்ய வேண்டும்,” என்று ஆணையம் விளக்கியுள்ளது.