இஸ்ரேலியத் தாக்குதலில் சேதமடைந்த பெய்ரூட் கட்டடம்; குறைந்தது இருவர் உயிரிழப்பு.
இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் லெபனான் தலைநகர் பெய்ரூட்டின் நகர மையத்தில் உள்ள குடியிருப்புக் கட்டடம் ஒன்று சேதமடைந்தது.
இந்தச் சம்பவம் செப்டம்பர் 30ஆம் தேதியன்று நிகழ்ந்தது.
பெய்ரூட்டின் நகர மையத்தைக் குறிவைத்து இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியிருப்பது இதுவே முதல்முறை.
தாக்குதலில் பெய்ரூட்டின் கோலா மாவட்டத்தில் உள்ள குடியிருப்புக் கட்டடத்தின் மேல் மாடி தகர்ந்ததாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தனர்.
அதில் குறைந்தது இருவர் மாண்டதாக லெபனானிய அதிகாரிகள் கூறினர்.
இந்தத் தாக்குதல் குறித்து இஸ்ரேலிய ராணுவம் கருத்து தெரிவிக்கவில்லை.
லெபனானில் ஹிஸ்புல்லாவுக்கு எதிராகவும் ஏமனில் ஹூதி படைகளுக்கு எதிராகவும் இஸ்ரேல் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ளது.
இது கட்டுக்கடங்காமல் போய்விடக்கூடும் என்றும் மத்திய கிழக்கில் மேலும் பல இடங்களில் போர் தலைவிரித்தாடக்கூடும் என்றும் அஞ்சப்படுகிறது.
ஈரானும் அமெரிக்காவும் அவற்றின் படைகளை அனுப்பக்கூடும் என்றும் அவ்வாறு நேர்ந்தால் அதன் விளைவாக ஏற்படும் அழிவை நினைத்துப் பார்க்க முடியாது என்றும் உலக நாடுகள் கவலை தெரிவித்துள்ளன.
செப்டம்பர் 29ஆம் தேதியன்று ஏமனில் உள்ள ஹூதி படைகளுக்கு எதிராகவும் லெபனான் எங்கும் உள்ள ஹிஸ்புல்லா போராளிகளைக் குறிவைத்தும் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்களை நடத்தியது.
அண்மையில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா மாண்டார்.
அவரது மரணம் ஹிஸ்புல்லா அமைப்புக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏமனின் ஹொடைடா துறைமுகம் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் குறைந்தது நால்வர் மாண்டதாகவும் 29 பேர் காயமடைந்ததாகவும் ஹுதி படையினரால் நடத்தப்படும் சுகாதார அமைச்சு கூறியது.
ஹூதி படை பாய்ச்சிய ஏவுகணைகளுக்குப் பதிலடி தரும் வகையில் தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்தது.
செப்டம்பர் 29ஆம் தேதியன்று இஸ்ரேலியத் தாக்குதல் காரணமாகக் குறைந்தது 105 பேர் மாண்டதாக லெபனானிய அதிகாரிகள் கூறினர்.
கடந்த இரண்டு வாரங்களாக நடத்தப்பட்ட தாக்குதலில் 1,000க்கும் மேற்பட்ட லெபனானியர்கள் மாண்டுவிட்டதாகவும் கிட்டத்தட்ட 6,000 பேர் காயமடைந்ததாகவும் லெபனான் சுகாதார அமைச்சு கூறியது.
இஸ்ரேலின் வடக்குப் பகுதியில் உள்ள தனது நாட்டினரைப் பாதுகாக்க எதிரிப் படைகளுக்கு எதிரான தாக்குதல்கள் தொடரும் என்று இஸ்ரேலிய ராணுவம் சூளுரைத்துள்ளது.