காவல்துறையுடன் போராட்டக்காரர்கள் மோதல்.

ஹிஸ்புல்லா தலைவர் சையது ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டதை எதிர்த்து பாகிஸ்தானின் கராச்சி நகரில் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 29) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அப்போது, அமெரிக்கத் துணைத் தூதரகத்தை நோக்கிச் செல்ல முயன்ற போராட்டக்காரர்களைக் காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். அதனையடுத்து, காவல்துறையினரை நோக்கி கற்களை வீசி, அவர்கள் மோதலில் ஈடுபட்டனர்.

நஸ்ரல்லாவின் படத்தை ஏந்திச் சென்ற போராட்டக்காரர்கள் அமெரிக்காவிற்கு எதிராக முழக்கமிட்டனர்.

கல்வீச்சில் காவல்துறை அதிகாரிகள் எழுவர் காயமுற்று, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டது.

“தடுப்பை மீறி முன்னேற முயன்றவர்களைக் காவல்துறை தடியடி நடத்தியும் கண்ணீர்ப் புகைக்குண்டுகளை வீசியும் கலைக்க வேண்டியதாயிற்று,” என்று காவல்துறைத் துணைத் தலைமை ஆய்வாளர் அசாத் ரஸா கூறினார்.

முரட்டுத்தனமாக நடந்துகொண்ட போராட்டக்காரர்கள்மீது குற்றவியல் வழக்கு பதியப்படும் என்றும் அவர் சொன்னார்.

பாகிஸ்தானில் மக்கள்தொகை மிகுந்த நகரமான கராச்சியில், ஈரான் ஆதரவு ஷியா பிரிவு அரசியல் கட்சியான மஜ்லிஸ் வகதத்துல் முஸ்லிமீன் ஏற்பாடு செய்த அந்த ஆர்ப்பாட்டத்தில் ஏறத்தாழ 3,000 பேர் பங்கேற்றனர்.

கடந்த வெள்ளிக்கிழமை லெபனான் தலைநகர் பெய்ரூட்மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் நஸ்ரல்லா கொல்லப்பட்டார்.

Leave A Reply

Your email address will not be published.