உலகின் 4வது பெரிய பணக்காரர் மார்க்.
உலகப் பணக்காரர்கள் பட்டியலில் ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஸக்கர்பெர்க் 4வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
புளும்பெர்க் பில்லியனெர்ஸ் குறியீடு வெளியிட்டுள்ள தகவலின்படி, 200 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்துகளைக் கொண்ட பணக்காரர்கள் பட்டியலுக்குள் அவர் நுழைந்துள்ளார். இதன்மூலம், உலகின் 4வது மிகப்பெரிய பணக்காரராக அவர் திகழ்கிறார்.
அவரது சொத்து மதிப்பு, மொத்தம் 201 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்துள்ளது.
இவ்வாண்டு மட்டும், ஓரக்கல் இணை நிறுவனர் லேரி எல்லிசன், மைக்ரசாஃப்ட் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரிகளான பில்கேட்ஸ் மற்றும் ஸ்டீவ் பால்மரைவிட அதிகளவு வருவாய் ஈட்டியுள்ளார் ஸக்கர்பெர்க்.
அண்மையில் நடந்த மெட்டா கனெக்ட் 2024 நிகழ்ச்சியில் பேசிய ஸக்கர்பெர்க், செயற்கை நுண்ணறிவுதான் தமது நிறுவனத்தின் எதிர்காலத் திட்டம் என்று கூறினார்.
உலகப் பணக்காரர்கள் பட்டியலில் டெஸ்லா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி எலன் மஸ்க் 272 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்துகளுடன் முதலிடத்திலும், அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ் 211 பில்லியன் அமெரிக்கா டாலர் சொத்துகளுடன் 2வது இடத்திலும், எல்.வி.எம்.எச். தலைவர் பெர்னார்டு அர்னால்ட் 207 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்துகளுடன் 3வது இடத்திலும் உள்ளனர்.