நவராத்திரி பூஜைகளில் கலந்துகொள்ளும் ஹிந்துக்கள் கண்டிப்பாக கோமியம் அருந்தவேண்டும் – பாஜக தலைவர் சர்ச்சை கருத்து!

நவராத்திரி பூஜைகளில் கலந்துகொள்ளும் ஹிந்துக்கள் கண்டிப்பாக கோமியம் அருந்தவேண்டும் என பாஜக தலைவர் தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மத்தியப் பிரதேசத்தின் இந்தூர் மாவட்ட பாஜக தலைவர் சின்டு வர்மா நவராத்திரி பூஜைகளில் கலந்துகொள்ள வரும் ஹிந்துக்கள் பூஜை நடக்கும் இடத்திற்குள் நுழையும் முன்பு பசுவின் கோமியத்தை அருந்தவேண்டும் எனக் கூறியுள்ளார். மேலும், எந்த ஹிந்துவும் பூஜை நிகழ்வில் பங்கேற்கையில் கோமியம் அருந்துவதை மறுக்க மாட்டார்கள் என்றும் பேசியுள்ளார்.

”பசுவின் கோமியம் என்பது ஹிந்துக்களுக்குப் புனிதமானது. இது பிராமணர்கள் மற்றும் துறவிகளால் புனிதச் செயல்களுக்குப் பயன்படுத்தப்பட்டது. சனாதனக் கலாசாரத்தில் இந்த பழக்கம் முக்கியத்துவம் வாய்ந்தது. அதனால், ஒவ்வொரு பூஜை நடக்கும் இடத்திற்கு முன்பும் அனைவருக்கும் கோமியம் பிரசாதமாக வழங்கப்படும். எந்தவொரு ஹிந்துவும் இதனை வேண்டாமென சொல்ல மாட்டார்கள் என்று நினைக்கிறேன்” என சின்டு வர்மா கூறியுள்ளார்.

இவ்வாறு கோமியம் வழங்குவது ஏன் என்பது குறித்துக் கேட்டபோது, “ஆதார் கார்டுகளைக் கூட எடிட் செய்ய முடியும். ஆனால், ஹிந்துவாக இருக்கும் ஒருவர் கோமியம் அருந்திய பின்னரே பூஜை நடக்கும் இடத்துக்குள் நுழைவார். அதில் மறுப்பதற்கான இடமேயில்லை. இதன் மூலம் தேவையற்ற நபர்கள் நுழைவதுத் தடுக்கப்படும்” என்றும் அவர் கூறினார்.

பாஜக தலைவரின் இந்தச் செயலுக்கு காங்கிரஸ் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.

”பசுக் காப்பகங்களின் அவலநிலைக் குறித்து கேள்வி எழுப்பினால் பாஜக தலைவர்கள் அமைதியாகி விடுவார்கள். ஆனால் அதனை அரசியலாக்குவதில் மட்டும் கவனம் செலுத்துவார்கள். கோமியம் அருந்தச் சொல்வது மக்களைப் பிளவுபடுத்த பாஜக பயன்படுத்தும் புதிய அரசியல் தந்திரம். பாஜக தலைவர்களும் பூஜை நிகழ்வில் கலந்து கொள்ளும்போது கோமியம் குடித்து அதனை சமூக வலைதளங்களில் விடியோ எடுத்துப் போடுமாறு கேட்டுக்கொள்கிறேன் ” என்று ம.பி. காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் நீலவ் சுக்லா தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.