பிகாரில் குண்டுவெடிப்பு! 7 சிறுவர்கள் காயம்!

பிகாரில் ஏற்பட்ட குண்டு வெடிப்பு சம்பவத்தில் 7 சிறுவர்கள் செவ்வாய்க்கிழமை காயமடைந்துள்ளனர்.

பிகார் மாநிலம், பாகல்பூர் மாவட்டம் கிலாஃபத் நகர் பகுதியில் செவ்வாய்க்கிழமை பகல் 12.30 மணியளவில் சிறிய வகை குண்டு வெடித்துள்ளது.

இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த 3 சிறுவர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் ஜவஹர்லால் நேரு மருத்துவக் கல்லூரியில் சிகிச்சைப் பெற்று வருவதாக பாகல்பூர் காவல் கண்காணிப்பாளர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

மேலும், சிறு காயங்களுடன் 4 சிறுவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குண்டு வெடிப்பா?

குண்டு வெடித்ததா அல்லது வேறேதேனும் பொருள்கள் வெடித்ததா என்பது குறித்து ராமதாஸ் தலைமையிலான சிறப்பு புலனாய்வுக் குழு சம்பவ இடத்தில் விசாரணை நடத்தி வருகின்றது.

மேலும், தடயவியல் நிபுணர்களும் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டு ஆதாரங்களை காவல்துறையினர் சேகரித்து வருகின்றனர்.

முதற்கட்ட விசாரணையில், குழந்தைகள் வீட்டிற்குள் விளையாடிக் கொண்டிருந்த போது, ​​அங்கிருந்த தகரப் பெட்டியைக் கீழ் போட்டபோது வெடித்துச் சிதறியதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்து செய்தியாளர்களுடன் ராமதாஸ் பேசியதாவது:

தடய அறிவியல் ஆய்வகத்தில் இருந்து நிபுணர்கள் குழு வரவழைக்கப்பட்டு, அந்த இடத்தில் மாதிரிகள் சேகரித்து வெடி பொருள்களின் தன்மை குறித்து ஆராய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த வெடிகுண்டு வைக்கப்பட்டது குறித்து அனைத்து கோணங்களிலும் விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது. விரைவில் விசாரணை நடத்தி முடிக்கப்படும் என்றார்.

திடீரென்று வெடி குண்டு வெடித்துச் சிதறிய சம்பவத்தால், அப்பகுதி மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.