கனியமண்ணகழ்வு மற்றும் காற்றாலைத் திட்டத்தை நிறுத்துமாறு,ஜனாதிபதி மற்றும் பிரதமர் காரியாலயத்திற்குத் தொடர்ந்தும் முறைப்பாட்டுத் தபாலட்டைகள் அனுப்பிவைப்பு.

மன்னார்த் தீவில் மேற்கொள்ளப் பட்டுவரும் கனியமண் அகழ்வு மற்றும் காற்றாலை அமைக்கும் திட்டங்களைக் கைவிடக் கோரியும் , அதற்கான ஒப்பந்தங்களை இரத்துச் செய்யக் கோரியும்,மன்னார் மக்கள் பல தடவைகள் போராட்டங்களை மேற்கொண்டிருந்தும் கடந்த அரசாங்கம் மௌனம் காத்துவந்த நிலையில்,

கடந்த வாரம்,மன்னார் தீவினைப் பாதுகாக்கும் முகமாகவும் மக்களின் கோரிக்கைக்கு அமைவாகவும் மன்னார் சமூகப் பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனம் (MSEDO)மன்னார் பேருந்து நிலையத்தில் வைத்து, காற்றாலை, மற்றும் கனியமண் அகழ்வுக்கெதிராக மக்களினால் கையெழுத்திடப்பட்ட முறைப்பாட்டுத் தபாலட்டைகளச் சேகரித்து ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு அனுப்பி வைத்திருந்தது

அதன் ஒரு தொடர்ச்சியாக, மன்னார்த் தீவு முழுவதிலுமிருந்தும் காற்றாலை, மற்றும் கனியமண் அகழ்விற்கெதிரான மக்களின் முறைப்பாட்டுத் தபாலட்டைகள் சேகரிக்கப் பட்டு இன்றைய தினம் (01.10.)செவ்வாய்க்கிழமை, மாலை 3 மணியளவில், மன்னார் பிரதான தபால் நிலையத்தினூடாக, ஜனாதிபதி மற்றும் பிரதமர் காரியாலயத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த MSDEO நிறுவனத்தின் தலைவர் ஜாட்சன் பிகிராடோ,

“மன்னார்த் தீவின் அபிவிருத்தி என்கிற போர்வையில் முன்னெடுக்கப்பட்டு வரும் காற்றாலை மின் உற்பத்தி, மற்றும் கனியமண் அகழ்வானது மன்னார்த் தீவிற்குப் பாரிய அழிவினையே ஏற்படுத்தும். அபிவிருத்தி செய்வதாயின் மன்னார்த் தீவிற்கு வெளியே போதிய நிலங்கள் உள்ளன. அபிவிருத்திகளை அங்கு மேற்கொள்ள முடியும்.

கடல் மட்டத்திலிருந்து சிறிதளவே உயரமான இந்தச் சிறு தீவிற்குள் இவ்வாறான அபிவிருத்திகள் வேண்டாம் என்பதே மக்களின் கோரிக்கையாய் உள்ளது.

கடந்த காலங்களில் இந்த அபிவிருத்திக்கெதிராகப் பல போராட்டங்களை முன்னெடுத்தும் அரசாங்கம் அதனைக் கருத்திற் கொள்ளாத நிலையில்,
தற்போதைய ஜனாதிபதி மற்றும் பிரதமரின் நேரடியான கவனத்தை ஈர்க்கும் முகமாகவே இந்த தபால் மூல முறைப்பாட்டினை மேற்கொண்டுள்ளோம் என்றார்.

Leave A Reply

Your email address will not be published.