பொதுத்தேர்தலில் ஒன்றிணைந்து போட்டியிட்டு வலுவான அரசியல் செல்வாக்கு குழுவை உருவாக்குங்கள்… இந்திய உயர்ஸ்தானிகர்.
பொது உடன்படிக்கையின் அடிப்படையில் நாடாளுமன்றத் தேர்தலில் ஒன்றிணைந்து போட்டியிடுமாறு வடக்கு மற்றும் கிழக்கு அரசியல் கட்சிகளுக்கு இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா தெரிவித்துள்ளார்.
வடக்கு, கிழக்கு அரசியல் கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் தலைவர்கள் குழுவொன்று நேற்று (30) கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகரை சந்தித்த போதே இந்திய உயர்ஸ்தானிகர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.
வவுனியாவில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த செல்வம் அடைக்கலநாதன், தமிழ் அரசியல் கட்சிகள் தனித்தனியாக செயற்படக் கூடாது எனவும், எதிர்வரும் பொதுத் தேர்தலில் தமிழ் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு அதிக ஆசனங்களை வெல்ல வேண்டும் என்பதே தமது எதிர்பார்ப்பு என இந்திய உயர்ஸ்தானிகர் கூறியதாக தெரிவித்தார்.
அவ்வாறாயின் மட்டுமே, அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி தமிழ் மக்களுக்கான நல்ல முடிவுகளை எட்டுவதற்கு சந்தர்ப்பம் ஏற்படும் எனவும் இந்திய உயர்ஸ்தானிகர் தமிழ் அரசியல் கட்சிகளிடம் தெரிவித்துள்ளார்.
இந்திய உயர்ஸ்தானிகர், தற்போதைய ஜனாதிபதியுடன் இணைந்து செயற்படுவதற்கு இந்திய அரசாங்கம் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
வடக்கு, கிழக்கை மையப்படுத்தி மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி நடவடிக்கைகளின் பலன்களை தமிழ் மக்கள் பெற்றுக்கொள்வதை உறுதிப்படுத்துவது தமிழ் மக்களின் பொறுப்பு என இந்திய உயர்ஸ்தானிகர் தமிழ் அரசியல் கட்சிகளுக்கு அறிவித்துள்ளார்.
இலங்கை தமிழ் அரசு கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜா, பொதுச் செயலாளர் கலாநிதி ப.சத்தியலிங்கம், டெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன், புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், ஈ.பி.ஆர். எல். எப். அணித்தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.