ஜே வி பி போல ஜனநாயக வழியில் களமிறங்கிய முன்னாள் புலிகள்

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் வடக்கு கிழக்கில் உள்ள 8 மாவட்டங்களிலும் சுயேச்சையாகக் களமிறங்கப் போவதாக ஏற்கனவே அறிவித்திருந்த “புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் “கட்சியினர், எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடுவதற்கென, நேற்றைய தினம் (01.10) செவ்வாய் கிழமை வேட்புமனுத்தாக்கல் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர்.

அந்த வகையில், திருகோணமலை மாவட்டத்தில், கட்சியின் தலைவர் கந்தசாமி இன்பராசா வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளதோடு, இரண்டாவது நாளாக, இன்றைய தினம் (02.10)மட்டக்களப்பு மாவட்டத்தில் கணபதிப் பிள்ளை பத்மராஜ் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளார்.

தொடர்ந்து மீதமுள்ள மூன்று தேர்தல் தொகுதிகளிலும் வேட்புமனுத் தாக்கல் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகப், புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலைப்புலிகள்” கட்சியின் தலைவர் கந்தசாமி இன்பராசா தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
“வருகின்ற பாராளுமன்றத் தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிடுவதற்கு வடக்கு கிழக்கின் 5தேர்தல் தொகுதிகளிலும் வேட்புமனுத் தாக்கல் செய்துவருகின்றோம்.”

“நாங்கள் எங்களுடைய மக்களுக்காக ஆயுதமேந்தி 30 வருடகாலமாகப் போராடியவர்கள். இப்போது ஜனநாயக வழியாக மக்களுடைய உரிமைகளை வென்றெடுக்கவே பாராளுமன்றம் செல்ல நினைக்கிறோம், நாங்கள் மற்ற அரசியல் வாதிகளைப் போல் எங்கள் குடும்பங்களை முன்னேற்றுவதற்காகவோ அல்லது எங்களுடைய பைகளை நிறைப்பதற்காகவோ பாராளுமன்றம் செல்லவில்லை முழுவதுமாய் ஊழலற்ற அரசியல் செய்து எங்களது மக்களுக்கு உன்னதமான சேவைகளை வழங்கும் நோக்கிலேயே பாராளுமன்றம் செல்ல நினைக்கிறோம்,

எனவே மக்கள் எங்களது கடந்தகாலத் தியாகங்களை நினைவிற் கொண்டு எமக்கு வாக்களித்து, எம்மை வெற்றிபெறச் செய்வார்கள் என நம்புகிறோம் என்றார் புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலைப்புலிகள்” கட்சியின் தலைவர் கந்தசாமி இன்பராசா.

 

 

Leave A Reply

Your email address will not be published.