செந்தில் பாலாஜி ஜாமீனுக்கு எழுந்துள்ள சிக்கல்
செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சராகியுள்ளதால் ஜாமீனை ரத்து செய்ய கோரிக்கை எழுந்துள்ளது.
தமிழ்நாடு மின்சார துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் 14 ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.
செந்தில் பாலாஜி சிறை சென்ற நிலையில், அவர் கவனித்து வந்த மின்சாரத்துறை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கும், மது விலக்கு துறை முத்துசாமிக்கு கூடுதல் பொறுப்பாக ஒதுக்கப்பட்டது. இதனையடுத்து இலாகா இல்லாத அமைச்சராக தொடர்ந்த செந்தில் பாலாஜி, கடந்த பிப்ரவரி மாதம் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.
செந்தில் பாலாஜி ஜாமீன் கேட்டு தொடர்ந்து மனு தாக்கல் செய்து வந்த நிலையில், சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றம் ஆகியவை தொடர்ச்சியாகத் தள்ளுபடி செய்தன. பின் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். வழக்கு விசாரணையில் ஜாமீன் வழங்கினால் வெளியே சென்று அதிகாரத்தை பயன்படுத்தி சாட்சியங்களை கலைப்பார் என அமலாக்கத்துறை வழக்கறிஞர்கள் ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதற்கு பதிலளித்த செந்தில் பாலாஜி, தற்போது போது அமைச்சராக இல்லை. வழக்கில் என்னுடைய எந்தவிதமான தலையீடும் இருக்காது என ஏற்கனவே உறுதியளித்து விட்டேன். ஒன்று. மணீஷ் சிசோடியாவுக்கு ஜாமீன் வழங்கப்பட்ட போது கொடுத்த தீர்ப்பு தனக்கும் பொருந்தும். நான் இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இதையெல்லாம் கருத்தில் கொண்டு ஜாமீன் வழங்க வேண்டும் என வாதத்தை முன் வைத்தனர்.
இதனையடுத்து செந்தில் பாலாஜிக்கு நிபந்தனை ஜாமீன் அளித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. சிறையில் இருந்து செந்தில் பாலாஜி ஜாமீனில் வெளியே வந்ததும், மூன்று நாளில் தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டு செந்தில் பாலாஜிக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அவர் கவனித்து வந்த மின்சாரம் மற்றும் மதுவிலக்கு துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, செந்தில் பாலாஜிக்கு எதிரான மோசடி வழக்கு விசாரணையை துரிதப்படுத்தக் கோரி, அவரால் பாதிக்கப்பட்டதாக கூறும் ஒய்.பாலாஜி என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணையில், ‘அமைச்சராக பதவியில் இல்லை என கூறி ஜாமீன்பெற்ற செந்தில் பாலாஜி, தற்போதுஅமைச்சராக பதவியில் உள்ளார். எனவே செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்ய வேண்டும்’ என மனுதாரர் தரப்பில் கோரிக்கை விடுத்தனர்.
மனுதாரர் தரப்பின் இந்த கோரிக்கையை தற்போது இந்த வழக்குடன் சேர்த்து விசாரிக்க முடியாது என்றும், புதிதாக மனு தாக்கல் செய்தால் அதுதொடர்பாக அடுத்த விசாரணையின்போது பரிசீலிக்கப்படும் என கூறிய நீதிபதிகள் விசாரணையை அக்டோபர் 22 ஆம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளனர்.
15 மாதங்களுக்கு பிறகு ஜாமீன் கிடைத்துள்ள நிலையில், வெளியே வந்த 3 நாளில் அமைச்சராக பதவியேற்றதால் செந்தில் பாலாஜியின் ஜாமீனுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.