மகளின் சாட்சியினால் தந்தைக்கு ஆயுள் தண்டனை வழங்கி பெங்களூரு நகர குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பு
மகளின் சாட்சியினால் தந்தைக்கு ஆயுள் தண்டனை வழங்கி பெங்களூரு நகர குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
உடுப்பி மாவட்டம், குந்தாபுரா தாலுக்காவில் உள்ள மூடுபாக்கே(Moodubagge) கிராமத்தைச் சேர்ந்த ரவிராஜ் ஷெட்டி, கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் உள்ள ஒரு சரக்கு நிறுவனத்தில் அதிகாரியாக பணிபுரிந்து வந்தார். கடந்த 2010-ல் சுப்ரீதா என்பவரை திருமணம் செய்து கொண்டார். அப்போது அவரது குடும்பம் ஹலசுரு அருகே தங்கியிருந்தது.
அவ்வப்போது கணவன்- மனைவியிடையே சண்டை ஏற்பட்டுள்ளது. 2016, செப். 14 அன்று ஷெட்டி வேலை முடிந்து திரும்பியபோது, அவரது மனைவி, மகளை தூங்க வைத்துக் கொண்டிருந்தார். சுப்ரீதாவிடம் உணவு பரிமாறுமாறு இருமுறை கேட்டுள்ளார். சுப்ரீதா, சிறிது நேரம் காத்திருக்கக் கூறியுள்ளார்.
இதனால் கோபமடைந்த ஷெட்டி, தனது மனைவியின் தலைமுடியைப் பிடித்து ஹாலுக்கு இழுத்துச் சென்று சரமாரியாக அடித்துள்ளார். சுப்ரீதாவும் அவரை திருப்பி அடித்தார். இதனால் மேலும் கோபமடைந்த ஷெட்டி, சுப்ரீதாவை சமையலறைக்கு இழுத்துச் சென்று கத்தியை எடுத்து சுப்ரீதாவின் முதுகு மற்றும் கழுத்தில் 22 முறை குத்தியுள்ளார். சுப்ரீதா ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். இந்த சம்பவத்தை நேரில் பார்த்த ஒரே சாட்சி அவர்களது மகள். அவர் அப்போது எல்கேஜி படித்துக்கொண்டிருந்தார்.
கொலை செய்த உடனேயே, ஷெட்டி தனது உறவினர்களை தொடர்பு கொண்டு, சுப்ரீதாவின் தொண்டையை அறுத்து கொலை செய்ததாகக் கூறியுள்ளார்.
இதுதொடர்பான வழக்கில் 2022 ஜூலை மாதம், அவர்களின் 11 வயது மகள் நீதிமன்றத்தில் தனது வாக்குமூலத்தை அளித்துள்ளார். காணொலி மூலமாக சிறையில் இருந்து ஆஜரான தனது தந்தையை கொலையாளி என்று அடையாளர் காட்டினார். கொலை நடந்தபோது தான் பயந்து தூங்குவதுபோல நடந்துகொண்டதாகவும் பின்னர் நடந்தவற்றை காவல்துறையிடம் தெரிவித்ததாக நீதிமன்றத்தில் கூறியுள்ளார்.
எதிர்தரப்பு வழக்கறிஞரின் குறுக்கு விசாரணையின் போது, தனது தந்தைக்கு எதிராக தன் குடும்ப உறுப்பினர்கள் யாரும் வற்புறுத்தவில்லை என்று கூறினார்.
ஷெட்டி தரப்பில், தனக்கும் சுப்ரீதாவுக்கும் கருத்து வேறுபாடுகள் இருந்ததாகவும் அவர் தன்னை கவனித்துக்கொள்ளவில்லை என்றும் காவல்துறையிடம் கூறினார். மேலும் அவர் வாய்ப்பை எதிர்பார்த்து தன்னை தாக்கியதாகவும் புகார் கூறினார். எனினும் சிறுமியின் வாக்குமூலம் மற்றும் அறிவியல் ஆதாரங்களுடன் காவல்துறை ஆய்வாளர் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தார்.
இறுதியில் மகளின் ஒரே சாட்சியை வைத்து, பெங்களூரு 45-வது கூடுதல் நகர குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முகமது மொகினுதீன், ஷெட்டிக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.