ஜனாதிபதியின் ஊழல் எதிர்ப்பு திட்டத்தை மெச்சிய இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா
ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவிற்கும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவிற்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று (02) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் அனுரகுமார திஸாநாயக்கவின் வெற்றிக்கு மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்த இந்திய உயர்ஸ்தானிகர், இலங்கையின் அபிவிருத்திச் செயற்பாடுகளுக்கு சகல வழிகளிலும் ஆதரவளிக்க இந்தியா தயாராக இருப்பதாகத் தெரிவித்தார்.
பிராந்தியத்தில் அமைதியான மற்றும் நிலையான நாடாக இலங்கை உருவாக வேண்டும் என்பதே தமது நாட்டின் விருப்பம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால நட்புறவையும் நெருக்கத்தையும் நினைவுகூர்ந்த இந்திய உயர்ஸ்தானிகர், அண்டை நாடுகளான சகோதர நாடுகளாக இரு நாடுகளுக்கும் இடையில் நிலையான நட்புறவை தொடர்ந்து பேணுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.
ஊழலுக்கு எதிராக திறம்பட போராடுவதற்கு அரசாங்க அமைப்புகளை டிஜிட்டல் மயமாக்குவதன் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டிய இந்திய உயர்ஸ்தானிகர், ஜனாதிபதியின் கொள்கை அறிக்கையில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ள ஊழல் எதிர்ப்பு வேலைத்திட்டத்தையும் பாராட்டியுள்ளார்.
மேலும், டிஜிட்டல் மயமாக்கல் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் இலங்கைக்கு உதவ இந்தியா தயாராக இருப்பதாக உயர்ஸ்தானிகர் குறிப்பிட்டுள்ளார்.