தாய்லந்தில் பள்ளிப் பேருந்து தீப்பற்றியது – பேருந்து ஓட்டுநர் கைது (Video)

தாய்லந்தின் பேங்காக்கில் தீப்பற்றிய பள்ளிப் பேருந்தை ஓட்டிய ஆடவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
தீச்சம்பவத்தில் 23 பேர் மாண்டனர்.
சம்பவம் நடந்த சில மணிநேரத்தில் பேருந்து ஓட்டுநர் சரணடைந்தார்.
கவனமின்றி பேருந்தை ஓட்டி மரணத்தையும் காயத்தையும் விளைவித்ததற்காகவும் பேருந்தை நிறுத்தி உதவி செய்யத் தவறியதற்காகவும் சம்பவம் குறித்துப் புகார் அளிக்காமல் இருந்ததற்காகவும் அவர் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
அதே பள்ளிப் பயணத்திற்குச் சென்றுகொண்டிருந்த இன்னொரு பேருந்தில் இருந்து தீயணைப்புக் கருவியை எடுத்ததாகவும் தீயை அணைக்க முடியவில்லை என்றும் ஓட்டுநர் கூறியிருந்தார்.
பயத்தில் இடத்தை விட்டுத் தப்பி ஓடியதாகவும் அவர் சொன்னார்.
பேருந்தில் மொத்தம் 6 ஆசிரியர்களும் 39 மாணவர்களும் இருந்தனர்.
பேருந்து நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தபோது தீப்பிடித்தது என்றும் தீ சட்டென்று பரவியதால் பலரால் தப்பிக்க இயலவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.
பேருந்து நிறுவனம் பாதுகாப்பு விதிமுறைகளைக் கடைப்பிடித்திருக்கிறதா என்பதை ஆராய விசாரணை நடைபெறுவதாகக் காவல்துறை கூறியது.