கார் விபத்தில் சிக்கிய தம்பதிகளின் ஏ.டி.எம். கார்டை திருடி பாவித்த டிராஃபிக் பொலிஸ்காரர் கைது.

பார்லிமென்ட் சர்க்கிளில் கார் விபத்தில் படுகாயம் அடைந்த திருமணமான தம்பதியரின் பணப்பை திருடப்பட்டு, அங்கிருந்த ஏ.டி.எம். கார்டை வைத்து 16,400 ரூபா பெறுமதியான பொருட்களை கொள்வனவு செய்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் வெலிக்கடை பொலிஸ் குற்றப்புலனாய்வு பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார் . கொழும்பு மாநகர போக்குவரத்து பிரிவு மற்றும் கொட்டாவ பொலிஸ் நிலையத்தில் பணிபுரியும் நபர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த மாதம் 9ஆம் திகதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளதுடன் விபத்தில் காயமடைந்த கணவன் மனைவி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் விபத்து இடம்பெற்ற போது அவர்களது பணப்பையை யாரோ திருடிச் சென்றுள்ளனர். அதிலிருந்த ATM அட்டையை பயன்படுத்தி பெலவத்தில் உள்ள பல்பொருள் அங்காடியில் 16,400 ரூபா பெறுமதியான பொருட்களை காயமடைந்த நபர் வாங்கியதாக வெலிக்கடை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

முறைப்பாட்டின் பிரகாரம், வெலிக்கடை பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் குழுவொன்று பல்பொருள் அங்காடிக்குச் சென்று அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கமராக் காட்சிகளை ஆராய்ந்து இந்த கான்ஸ்டபிளை அடையாளம் கண்டு கொழும்பு மாநகர போக்குவரத்துப் பிரிவிற்குச் சென்று சந்தேகத்தின் பேரில் அவரைக் கைது செய்ததாக உயர் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த அட்டையை பயன்படுத்தி பொருட்களை கொள்வனவு செய்து துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இந்த பொலிஸ் கான்ஸ்டபிளிடம் ஒழுக்காற்று விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொலிஸார் அவரை பணி இடைநீக்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். வெலிக்கடை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.