இஸ்ரேலியத் துருப்பினர் 8 பேர் மாண்ட பின்னரும் இஸ்ரேல் லெபனானில் மீண்டும் தாக்குதல்
இஸ்ரேல் லெபனானில் மீண்டும் தாக்குதல் நடத்தியிருக்கிறது.
தரைத் தாக்குதலில் இஸ்ரேலியத் துருப்பினர் மாண்ட பிறகு அந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது.
ஹிஸ்புல்லாக்களுடன் நடந்த சண்டையில் இஸ்ரேலியத் துருப்பினர் 8 பேர் மாண்டனர்.
இஸ்ரேலியப் படையினர் லெபனானுக்குள் புகுந்த இரண்டு நாளில் அவர்கள் உயிரிழந்தனர்.
லெபனானில் இஸ்ரேல் அதன் துருப்பினரின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது. நான்கு படையணியினர் களத்தில் இறங்க இஸ்ரேல் அழைப்பு விடுத்துள்ளது. ஒவ்வோர் அணியிலும் சில ஆயிரம் துருப்பினர் உள்ளனர்.
நீண்டகாலப் போர் தற்போதுதான் தொடங்கியிருப்பதாக ஹிஸ்புல்லாக் குழு எச்சரித்தது.
இஸ்ரேலியத் துருப்பினரை ஒருங்கிணைந்து செயல்படும்படிப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாஹு (Benjamin Netanyahu) வலியுறுத்தினார்.
நேற்று முன்தினம் (1 அக்டோபர்) இஸ்ரேலுக்குள் ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது. அதற்கு எப்படி பதிலடி கொடுப்பது என்பது குறித்துப் பாதுகாப்புக் குழுவுடன் நெட்டன்யாஹு ஆலோசனை நடத்தினார்.
காஸாவின் தென் பகுதியில் உள்ள கான் யூனிஸ் (Khan Younis) வட்டாரத்தில் இஸ்ரேல் நடத்திய ஆகாய, தரைத் தாக்குதல்களில் 51 பேர் மாண்டனர்.
காஸா சுகாதார அமைச்சு அந்தத் தகவலைத் தெரிவித்தது.
நேற்று முன்தினம் (1 அக்டோபர்) இரவே கான் யூனிஸ் நகரின் சில பகுதிகளில் கவச வாகனங்கள் முன்னேறிச் சென்றதாகத் தெரிகிறது.
கடுமையான சண்டையும், குண்டுவீச்சும் நடந்ததாக வட்டாரவாசிகள் கூறினர்.
எச்சரிக்கை விடுக்காமல் கவச வாகனங்கள் தாக்குதல் நடத்தியதாகக் காயமடைந்த ஒருவர் சொன்னார்.
மத்திய, வட காஸாவில் உள்ள நான்கு பள்ளிக்கூடங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இடம்பெயர்ந்த மக்கள் அங்கு தங்கியிருந்தனர்.
ஹமாஸின் கட்டுப்பாட்டு நிலையங்கள் பள்ளிகளுக்குள் இருந்ததாக இஸ்ரேல் கூறுகிறது.