அநுரவை மிரட்டும் விமல்! ஒற்றையாட்சியைப் பாதுகாத்தவாறே பயணிக்க வேண்டும் என வலியுறுத்து.
“சர்வதேச சமூகத்தின் தேவைகளை நிறைவேற்றாது, ஒற்றையாட்சியைப் பாதுகாத்தபடி தேசிய மக்கள் சக்தி பயணிக்க வேண்டும்.”
இவ்வாறு தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரான முன்னாள் எம்.பி. விமல் வீரவன்ச வலியுறுத்தினார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது:-
“கட்சியொன்று ஆட்சிப்பீடமேறிய பின்னர் ஆரம்ப காலம் என்பது இன்பமாகவே இருக்கும். கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சிகாலத்திலும் ஆரம்பகாலம் என்பது சுவையானதாக இருந்தது. நாட்கள் செல்லத் செல்லத்தான் உண்மையான முகம் எது என்பதை அறிந்துகொள்ள முடியும்.
நாட்டுக்கும், மக்களுக்கும் தவறிழைக்காது, பிரிவினைவாதத்துக்குக் கப்பம் வழங்காது, வெளிநாட்டு சக்திகளின் தேவைக்கேற்ப செயற்படாது, நாட்டின் இறையாண்மை மற்றும் ஒற்றையாட்சியைப் பாதுகாத்து பயணித்தால் எவ்வித பிரச்சினையும் இருக்காது. இதற்கு நாட்டு மக்களும் ஆணை வழங்குவார்கள்.
அதேவேளை, எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் சர்வஜன பலவேகய கட்சியின் சார்பிலேயே நாம் போட்டியிடுவோம். எதிரணிகளுக்கிடையில் கொள்கை ரீதியிலான முரண்பாடுகள் உள்ளன. எனவே, எதிரணி கூட்டணி என்பது சாத்தியப்படமாட்டாது.” – என்றார்.
……………..