பங்ளாதேஷ் தூதரக அதிகாரிகள் மாற்றம்.
பங்ளாதேஷின் இடைக்கால அரசாங்கம் வெளிநாடுகளில் உள்ள தனது தூதரகங்களில் மறுசீரமைப்பு செய்து வருகிறது. அந்த வகையில், இந்தியாவுக்கான தூதர் உட்பட ஐந்து நாடுகளுக்கான தனது தூதர்களை மீட்டுக்கொண்டுள்ளது. இதனை அந்நாட்டு வெளியுறவு அமைச்சின் அதிகாரி ஒருவர் அக்டோபர் 3ஆம் தேதி தெரிவித்தார்.
தெற்காசிய நாடான பங்ளாதேஷில் ஏற்பட்ட அதிரடி அரசியல் மாற்றங்களால் அமைதிக்கான நோபெல் பரிசு பெற்ற முகம்மது யூனுஸ் தலைமையில் மாணவர்கள் ஆதரவுடனான இடைக்கால அரசாங்கம் ஆட்சி செய்து வருகிறது.
பங்ளாதேஷில் பல வாரங்களாக நீடித்த போராட்டங்களுக்குப் பிறகு, அப்போதைய பிரதமர் ஷேக் ஹசீனா , கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி தனது பதவியைத் துறந்துவிட்டு இந்தியாவுக்குத் தப்பி ஓடினார்.
இந்நிலையில், பங்ளாதேஷ் அரசாங்கம் வெளிநாடுகளில் உள்ள தனது தூதரகங்களில் உள்ள உயர் மட்ட அதிகாரிகளை மாற்றியமைக்கும் பணியை முடுக்கிவிட்டுள்ளது.
அந்த வகையில், ஐந்து நாடுகளுக்கான தனது தூதர்களை உடனடியாக நாடு திரும்புமாறு பங்ளாதேஷ் வெளியுறவு அமைச்சு உத்தரவிட்டுள்ளதாக வெளியுறவுத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
அந்தத் தூதர்கள் நாடு திரும்பியதும் தங்களுடைய பொறுப்புகளில் இருந்து தங்களை விடுவித்துக் கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டதாக அந்த அதிகாரி தெரிவித்தார். அவர் இதுகுறித்து மேல் விவரங்கள் எதுவும் தெரிவிக்கவில்லை.
முன்னதாக பிரிட்டனுக்கான பங்ளாதேஷ் தூதர் திருமதி சைதா முனா தஸ்னீம் நாடு திரும்பும்படி அழைக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து இப்போது ஐந்து தூதர்கள் நாடு திரும்ப உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் பிரதமர் ஹசீனா ஆட்சியின்போது அவருடைய கொள்கைகளுக்கு எதிராக மாணவர்கள் தலைமையில் நாடு முழுவதும் போராட்டங்களும் வன்முறைச் சம்பவங்களும் தலைவிரித்தாடின. அதன் விளைவாக 700 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
பங்ளாதேஷில் நிகழ்ந்த அரசியல் மாற்றங்களுக்குப் பின் அங்கு வாழும் சிறுபான்மையினரான இந்துக்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. ஆனால், இது போன்ற சம்பவங்கள் அங்கு அரசியல் கட்சியினரால் தூண்டப்படுவதால் ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்களே தவிர்த்து, மதம் சார்ந்த சண்டையல்ல என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.