ரஷ்யா நடத்திய தாக்குதலில் மூவர் மரணம்.
ஆளில்லா வானூர்திகளைப் பயன்படுத்தி ரஷ்யா நடத்திய தாக்குதலில் மூவர் மாண்டதாக உக்ரேன் அக்டோபர் 3ஆம் தேதியன்று தெரிவித்தது.
மாண்டோரில் ஒரு குழந்தையும் அடங்கும் என்று தெரிவிக்கப்பட்டது.
உக்ரேனின் வடக்குப் பகுதியில், ரஷ்ய எல்லைக்கு அருகில் உள்ள இடத்தில் வீடு வீடாகச் சென்று எரிவாயு விநியோகத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த லாரி மீது ரஷ்யா அனுப்பிய ஆளில்லா வானூர்திகள் மோதியதாக உக்ரேனியக் காவல்துறை டெலிகிராம் தளத்தில் பதிவிட்டது.
அதையடுத்து, லாரி வெடித்துச் சிதறியதாகவும் அருகில் இருந்த குடியிருப்புக் கட்டடங்கள் தீப்பிடித்து எரிந்ததாகவும் காவல்துறை கூறியது.
இந்த வெடிப்பில் மூவர் மாண்டதுடன் நால்வர் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் அந்த நால்வரில் இரண்டு சிறுவர்களும் அடங்குவர்.
சிறுவர்களின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக உக்ரேனிய அதிகாரிகள் தெரிவித்தனர்.