தேர்தலில் தமிழ்த் தேசியக் கட்சிகள் ஒன்றிணைந்து களமிறங்க வேண்டும் வடக்கு – கிழக்கு ஒருங்கிணைப்புக் குழு வலியுறுத்து.

“தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகள் பிரிந்து நின்று தேர்தலில் போட்டியிட்டால் வாக்குகள் சிதறடிக்கப்பட்டு தமிழ்ப் பிரதிநிதித்துவங்கள் இல்லாமல் போலும் அபாயம் உள்ளதால் வடக்கு, கிழக்கில் தமிழ்த் தேசியக் கட்சிகள் ஒன்றிணைந்து நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட வேண்டும்.”

இவ்வாறு வடக்கு – கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர்கள் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளனர்.

அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,

“நிலையான, கௌரவமான உரிமைகளுடன் கூடிய நிலையான அரசியல் தீர்வு கோரி எமது வடக்கு – கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவானது 2022 கார்த்திகை 8 ஆம் திகதி சமஷ்டி தீர்வுக்கான மக்கள் பிரகடனத்தை வெளியிட்டிருந்தது.

இன்று வடக்கு – கிழக்கு தமிழ் பேசும் மக்களான நாம் எதிர்கொண்டு வரும் அரச இனவாத அடக்குமுறையில் இருந்து மீண்டு கௌரவமான, உரிமைகளை அனுபவிக்கும் பிரஜைகளாக வாழ வேண்டுமாயின் நிலையான அரசியல் தீர்வே அவசியம்.

இதுவரை காலமும் ஆட்சிக்கு வந்த சிங்கள அரசியல் தலைமைகள் அரசியல் தீர்வுகள் பற்றி வாயளவில் கதைத்து தமிழ் மக்களை ஏமாற்றி வந்துவிட்டனர்.

எவ்வளவு காலத்துக்கு எமது வருங்கால சந்ததியினரும் இந்த அடக்குமுறைகளையும் ஏமாற்றங்களையும் அனுபவிக்கப் போகின்றனர்? எமது தலைமுறையுடன் துன்பங்களை முடிவுக்குக் கொண்டுவர ஒரு மக்கள் சமூகமாக ஒருங்கிணைந்து செயற்படுவோம்.

இதற்காக, அனைவரும் ஜனநாயக வழியில் நின்று செயற்படும் ஒரு சமூக இயக்கமாகப் பரிணமிக்க வேண்டும்.

இந்நிலையில், எமது வடக்கு – கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவானது தமிழ் தேசியப் பரப்பிலுள்ள தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளின் அரசியல் தலைமைகளுக்கு ஒரு பகிரங்கமான கோரிக்கையை முன்வைக்கின்றது.

இலங்கையின் குறிப்பாக வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடப்போகும் தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகள், கட்சி ரீதியாக தனித்துப் போட்டியிடாமல் ஓர் கூட்டாக அல்லது கூட்டணியாகத் தேர்தலில் போட்டியிட்டு வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் அதிக மக்கள் பிரதிநிதிகளை நாடாளுமன்றம் அனுப்ப வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம்.

தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகள் கூட்டாக இணையாத சந்தர்ப்பத்தில் வாக்குகள் சிதறப்பட்டு நாடாளுமன்றப் பிரதிநிதித்துவங்கள் குறைவடைவதுடன், குறிப்பாக திருகோணமலை மற்றும் அம்பாறை மாவட்டங்களில் தமிழ் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவங்களை இழக்க வேண்டி நேரிடும்.” – என்றனர்.
…………………….

Leave A Reply

Your email address will not be published.