பவன் கல்யாண் கொடுத்த எச்சரிக்கை: ஒற்றை வரியில் பதில் சொன்ன உதயநிதி ஸ்டாலின்!

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்கம் சார்பில் கடந்த ஆண்டு சனாதன ஒழிப்பு மாநாடு நடத்தப்பட்டது. இதில் பங்கேற்று பேசிய அன்றைய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “சனாதன தர்மம் சமூக நீதிக்கு எதிரானது. டெங்கு, மலேரியா, கொரோனா இதையெல்லாம் நாம் எதிர்க்க முடியாது. ஒழிக்கத்தான் வேண்டும். அப்படித்தான் இந்த சனாதனம். சனாதனத்தை எதிர்ப்பதைவிட, ஒழிப்பதே நாம் செய்ய வேண்டிய முதல் வேலை” என்று பேசியிருந்தார்.
இதற்கு வலதுசாரிகள், பா.ஜ.க. மற்றும் இந்து மத நம்பிக்கைக் கொண்டர்கள் என பல்வேறு தரப்பினரும் தங்களது கடும் கண்டனத்தைத் தெரிவித்தனர். மேலும், அமைச்சர் உதயநிதிக்கு எதிராக நாட்டின் பல்வேறு இடங்களில் வழக்குகள் தொடரப்பட்டன. தற்போது அந்த வழக்குகள் மீதான விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விவகாரம் சற்று ஓய்ந்த நிலையில், திருப்பதி கோயில் பிரசாதமான லட்டுவில் கடந்த ஜெகன் மோகன் ஆட்சியில் மாட்டு கொழுப்பு கலக்கப்பட்டதாக ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு குற்றம்சாட்டினார். இதனைத் தொடர்ந்து இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்தது.
இதற்கு திருப்பதி தேவஸ்தானம் சிறப்பு பூஜையை நடத்திய நிலையில், ஆந்திர மாநில துணை முதல்வர் பவன் கல்யாண் 11 நாள் விரதம் மேற்கொண்டு திருப்பதி கோயில் மலை பாதையில் நடந்து சென்று நேற்று சாமி தரிசனம் மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து அவர் கட்சியினர் ஏற்பாடு செய்திருந்த பொது கூட்டத்தில் பங்கேற்று பவன் கல்யாண் பேசினார்.
அந்தக் கூட்டத்தில் அவர், “இங்கே நிறைய தமிழ் மக்கள் இருக்கிறார்கள் என்பதால் தமிழிலேயே சொல்கிறேன். தமிழ்நாட்டில் சிலர், சனாதன தர்மம் ஒரு வைரஸ் மாதிரி அதனை நாசம் செய்ய வேண்டும் என்று கூறுகிறார்கள். ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள் இதை யார் சொல்லியிருந்தாரோ அவருக்கு சொல்லிக் கொள்கிறேன்.
சனாதன தர்மத்தை யாராலும் அழிக்க இயலாது. அதனை அழிக்க நினைப்பவர்கள் அழிந்து போவார்கள். திருப்பதி பாலாஜியின் மண்ணில் இருந்து இதனை கூறுகிறேன். நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்” என்று பேசியிருந்தார்.
இந்நிலையில் இன்று சென்னையில் தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகம் பட்டமளிப்பு விழா மற்றும் பருவமழை முன்னெச்சரிக்கைக்கான ஏற்பாடுகள் தொடர்பாக மாநில அவசரகால செயல்பாட்டு மையம் ஆய்வு உள்ளிட்ட நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றார்.
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்கள், சனாதனத்தை அழிக்க நினைப்பவர்கள் அழிந்து போவார்கள் என பவன்கல்யாண் கூறியிருக்கிறார் என கேள்வி எழுப்பினர். அதற்கு ஒற்றைவரியில் பதில் அளித்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “let’s wait and see” என பதில் அளித்து சிறு புன்னகையுடன் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.