டிசம்பரில் முதல் ஹைட்ரஜன் ரயில் சோதனை ஓட்டம்!

சுற்றுச்சூழலை பாதிக்காத சுத்தமான ஹைட்ரஜன் எரிபொருள் செல் தொழில்நுட்பத்தில் தயாராகவுள்ள ஹைட்ரஜன் ரயில் சோதனை ஓட்டம் டிசம்பரில் நடைபெற உள்ளது. இந்த ரயில் திட்டத்தை ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் நேரில் கவனித்து வருவதாக ரயில்வே வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்திய ரயில்வேத் துறையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் நடவடிக்கையாக, சுற்றுப்புறச் சூழலை மாசுப்படுத்தாத ஹைட்ரஜன் எரிபொருள் செல் தொழில்நுட்பத்தில் இயங்கும் ரயில்களை இயக்க அரசு திட்டமிட்டுள்ளது.

இதையடுத்து ஜெர்மனி, பிரான்ஸ், சுவிடன் மற்றும் சீனாவுக்கு அடுத்தபடியாக, ஹைட்ரஜன் எரிபொருள் செல் தொழில்நுட்பத்தில் இயங்கும் ரயில்களை இயக்கும் ஐந்தாவது நாடாக இந்தியா மாறுகிறது. தற்போதுள்ள டீசல் எலக்ட்ரிக் மல்டிபிள் யூனிட் ரயில்களில் ஹைட்ரஜன் எரிபொருள் கலத்தை மீண்டும் பொருத்துவதற்கான ஒரு முன்னோடித் திட்டமாக இதனைக் கொண்டு வந்துள்ளது.

ஹைட்ரஜன் எரிபொருள் கொண்டு இயங்கும் இந்த ரயிலை வடக்கு ரயில்வே மண்டலத்தின் கீழ் ஹரியாணாவில் உள்ள ஜிந்த் – சோனிபட் வழித்தடத்தில் வரும் டிசம்பரில் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், சுற்றுச்சூழலுக்கு உகந்த இந்த ரயில்கள் ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் மேற்பார்வையில் சென்னை ஐசிஎஃப் ரயில் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டு வருவதாக மூத்த ரயில்வே அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தினார்.

சோதனைகளுக்குப் பிறகு, இந்த ஹைட்ரஜன் ரயில் திட்டத்தின் கீழ் இந்திய ரயில்வே 35 ஹைட்ரஜன் ரயில்களை தயாரிக்க உள்ளது. ஒவ்வொரு ரயிலும் ரூ. 80 கோடி செலவில் தயாரிக்கப்படுகிறது. மேலும் பல்வேறு பாரம்பரிய மற்றும் மலைப் பாதைகளில் உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக ரூ.70 கோடி முதலீடு செய்யப்படுகிறது.

இந்த ரயில்கள் முதல்கட்டமாக பாரம்பரிய வழித்தடங்கள் மற்றும் மலைப்பாங்கான பகுதிகளில் ரயில்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இது 2030 ஆம் ஆண்டிற்குள் நிகர பூஜ்ஜிய கார்பன் உமிழ்வு இலக்குகளை அடைவதற்கான இந்தியாவின் இலக்குக்கு பங்களிக்கும் ஒரு முக்கிய நடவடிக்கை என்று கூறிய அதிகாரிகள், ஹைட்ரஜனை எரிபொருளாகப் பயன்படுத்துவது பசுமை போக்குவரத்திற்கு குறிப்பிடத்தக்க நன்மைகளை வழங்கும். ரயில்வேயின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் நிலையான போக்குவரத்து இலக்குகளை அடைய இந்த முயற்சி உதவும்.

ஹைட்ரஜன் ரயில்களுடன், மற்ற சுற்றுச்சூழல் திட்டங்களுடன் ஆற்றல் திறனை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ள ரயில்வேயின் நடவடிக்கையானது இந்தியாவின் பசுமை போக்குவரத்து அமைப்பிற்கு மாறுவதற்கான குறிப்பிடத்தக்க வளர்ச்சியாக இருக்கும்.

டிசம்பர் மாதம் மேற்கொள்ளப்படும் சோதனை ஓட்டத்திற்கு தேவைப்படும் ஹைட்ரஜன் எரிபொருளை, கிரீன் ஹெச் இந்தியா எனும் ஸ்டார்ட்-அப் நிறுவனம் விநியோகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கிடையில், பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் பாதுகாப்பு அமைப்பிடம் இருந்து ஹைட்ரஜன் ஆலைக்கு ரயில்வே ஒப்புதல் பெற்றுள்ளது. மேலும், ஹைட்ரஜன் எரிபொருள் பாதுகாப்புத் தொடர்பாக முன்னணி ஜெர்மனி நிறுவனம் ஒன்று இந்திய ரயில்வே உடன் இணைந்து ஆய்வு மேற்கொண்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த திட்டம் வெற்றிபெறும் பட்சத்தில், இந்தியா பசுமை எரிபொருளை நோக்கி வேகமாக நகர்ந்து செல்வது உறுதியாகிவிடும். இது, எரிபொருளுக்காக பிற நாடுகளை சார்ந்திருக்கும் சூழலை மாற்றி, நாட்டை வளர்ச்சிப் பாதைக்கு எடுத்துச் செல்லும்.

Leave A Reply

Your email address will not be published.