திசைகாட்டி மூலம் போட்டியிட அநேகர் அங்கலாய்ப்பு.. ஒரு வேட்பாளர் இடத்துக்காக 40-50 விண்ணப்பங்கள்.
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட தேசிய மக்கள் சக்திக்கு அதிகளவான கோரிக்கைகள் வந்துகொண்டிருப்பதாக அக்கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கே.டி. லால் காந்த குறிப்பிடுகிறார்.
தேசிய மக்கள் சக்தியிலிருந்து கண்டி மாவட்டத்திற்கு மாத்திரம் போட்டியிடுவதற்கு சுமார் 500 பேர் அளவு விண்ணப்பித்துள்ளதாகவும் அவர் கூறினார்.
ஆனால் கண்டி மாவட்டத்திற்கு ஒரு கட்சியில் அல்லது சுயேச்சைக் குழுவில் இருந்து 15 பேர் மாத்திரமே போட்டியிட முடியும் எனவும் மாவட்டத்திலிருந்து 12 பாராளுமன்ற உறுப்பினர்களே தெரிவு செய்யப்படுவார்கள் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களில் 60 பேர் மீது கட்சி கவனம் செலுத்தி கடைசி 15 பேரைத் தெரிவு செய்யும் என்கிறார்.
தேசிய மக்கள் சக்தி வேட்பாளர்கள் செல்வாக்கை காட்டினாலும் தனிப்பட்ட முறையில் செல்வாக்கு பெரிதாக கருத்தில் கொள்ளப்படாது என அவர் மேலும் கூறினார்.