ஜனாதிபதி அனுரவிடமிருந்து இந்தியாவுக்கு ஒரு உறுதி
இந்தியாவின் பாதுகாப்பு நலன்களுக்கு பாதகமாக இலங்கைப் பிரதேசம் ஒருபோதும் பயன்படுத்தப்பட மாட்டாது என ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க வலியுறுத்தியுள்ளார் என இந்திய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.
இலங்கை வந்த இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கருடனான சந்திப்பின் பின் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க இந்த உறுதியை கொடுத்துள்ளார்.
மேலும், இனப்பிரச்சினை மற்றும் நல்லிணக்கச் செயற்பாடுகளில் கவனம் செலுத்திய ஜெய்சங்கர், இலங்கையின் ஒற்றுமை, பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மையைப் பேணுவதன் மூலம் சமத்துவம், நீதி, மரியாதை மற்றும் அமைதிக்கான தமிழ் மக்கள் உட்பட அனைத்து சமூகங்களின் அபிலாஷைகளுக்கும் இந்தியாவின் ஆதரவை வலியுறுத்தினார். .
அரசியலமைப்பின் 13வது திருத்தத்தை முழுமையாகவும் வினைத்திறனாகவும் அமுல்படுத்துவதும் மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்துவதும் இந்த நோக்கங்களை இலகுவாக்கும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
உத்தியோகபூர்வ விஜயத்திற்காக இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் நேற்று (04) காலை கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கு இந்திய நாட்டின் விமானப்படைக்கு சொந்தமான விசேட விமானத்தில் இலங்கையை வந்தடைந்தார்.
இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவை ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்தார்.
அங்கு, இலங்கையின் சுற்றுலாத் துறை மற்றும் முதலீடு, மின்சாரம் மற்றும் எரிசக்தி மற்றும் திரவ பால் துறைக்கு ஆதரவளிப்பதில் இந்தியாவின் ஆர்வம் குறித்து இந்திய வெளிவிவகார அமைச்சர் தெளிவுபடுத்தியதுடன், இலங்கையின் பொருளாதார மறுமலர்ச்சிக்கு இந்தியா முழுமையான ஆதரவை வழங்கும் என்றும் உறுதியளித்தார்.
அத்துடன், இந்தியா மற்றும் இலங்கையின் பாதுகாப்பு குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளதுடன், பிராந்தியத்தின் ஸ்திரத்தன்மை மற்றும் பாதுகாப்பிற்காக இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பு குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.