ஊழியர்கள் துன்புறுத்தல்: மெர்செடிஸ்-பென்சுக்கு $9.5 மில்லியன் அபராதம்

ஜெர்மானிய வாகன உற்பத்தி நிறுவனமான ‘மெர்செடிஸ்-மென்ஸ்’, இழப்பீடாக அமெரிக்க டாலர் $7.3 மில்லியன் (S$9,516,280) தர வேண்டும் என்று பிரேசிலிய தொழிலாளர் நீதிமன்றம் அக்டோபர் 3ஆம் தேதி தீர்ப்பளித்தது.

சாவ் பாலோ மாநிலத்தில் அமைந்துள்ள ஒரு தொழிற்சாலையில் ஊழியர்களை பாகுபாட்டிற்கும் துன்புறுத்தலுக்கும் ஆளாக்கியதற்காக நிறுவனம் இந்த இழப்பீட்டுத் தொகையைச் செலுத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.

வேலையிடத்தில் காயமடைந்த ஊழியர்கள், மீண்டும் பணிக்குத் திரும்பும்போது அவர்கள் ஓரங்கட்டப்பட்டதுடன் ‘அவமானப்படுத்தும், இழிவுபடுத்தும் சூழல்களுக்கு’ அவர்களை ஆளாக்கியதாகக் கூறப்பட்டது. இனவாதமும் இதில் அடங்கும்.

நீதிமன்ற ஆவணங்களின்படி, 2004ஆம் ஆண்டுக்கும் 2019ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் மெர்செடிஸ்-பென்ஸ் நிறுவனத்தின் ஊழியர்கள் வேலையிடத்தில் காயமுற்று மீண்டும் வேலைக்குத் திரும்பும்போது துன்புறுத்தலுக்கு ஆளானதாக அறியப்படுகிறது.

மருத்துவ விடுப்பு முடிந்து வரும் அவர்கள், தனிமைப்படுத்தப்பட்டதுடன் பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்ற வாய்ப்புகளையும் இழக்க நேர்ந்தது.

ஊழியர் ஒருவர் ஐந்து கிலோவுக்கும் அதிகமான மூலப்பொருள்களைத் தூக்க முடியாததால் அவரின் முதலாளியின் வேலை நண்பர் இழிவான சொற்களால் அவரை அழைத்ததாக அந்த ஊழியரே சாட்சியம் அளித்தார்.

தம் மேற்பார்வையாளரிடம் இதுகுறித்து புகார் அளித்தபோது பதிலுக்கு அந்த ஊழியரே மூன்று நாள்களுக்குப் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.

வேறோர் ஊழியர் மருத்துவ விடுப்புக்குப்பின் வேலைக்குத் திரும்பிய நிலையில் காப்பி தருவது, மேலாளரின் காரைக் கழுவுவது போன்ற வேலைகள் அவருக்குத் தரப்பட்டதாகக் கூறினார்.

இவையாவும் தனிப்பட்ட சம்பவங்கள் என்று நிறுவனம் கூறியதை நீதிபதி ஏற்றுக்கொள்ளவில்லை.

Leave A Reply

Your email address will not be published.