லெபனானிலிருந்து குடிமக்களை வெளியேற்றும் உலக நாடுகள்
லெபனானில் இருந்து 200க்கும் அதிகமான சீனக் குடிமக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளதாக சீன வெளியுறவு அமைச்சு சனிக்கிழமை (அக்டோபர் 5) தெரிவித்தது.
“இரு தொகுதிகளாக வெளியேற்றப்பட்டுள்ள அவர்[Ϟ]களில் ஹாங்காங்வாசிகளும் தைவான் நாட்டவர் ஒருவரும் அடங்குவார்,” என்று அமைச்சு கூறியது.
“லெபனானில் உள்ள சீனத் தூதரகம், லெபனானில் தொடர்ந்து உறுதியாக உள்ளது. பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுப்பதில் அங்குள்ள சீனக் குடிமக்களுக்கு அது தொடர்ந்து உதவி வருகிறது,” என்றது அமைச்சு.
லெபனானில் உள்ள தைவானியர்கள் மூவர் அக்டோபரில் தைவான் திரும்பவிருந்ததாகவும் குடும்பக் காரணங்களுக்காக வேறிருவர் லெபனானில் தொடர்ந்து தங்க முடிவெடுத்ததாகவும் தைவானிய வெளியுறவு அமைச்சு தெரிவித்தது.
இதற்கிடையே, மொத்தம் 97 தென்கொரியக் குடிமக்களும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களும் லெபனானில் இருந்து ராணுவப் போக்குவரத்து விமானத்தில் சனிக்கிழமை தென்கொரியா திரும்பியதாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சு தெரிவித்தது.
முன்னதாக, ராணுவ விமானம் ஒன்றில் லெபனானில் இருந்து புறப்பட்ட ஜெர்மானியக் குடிமக்கள் 130 பேர், புதன்கிழமை இரவு ஃபிராங்ஃபர்ட் நகரில் தரையிறங்கினர்.
கிரீஸ், சைப்ரஸ் நாட்டவர்களை வெளியேற்றுவதற்காக லெபனானியத் தலைநகர் பெய்ரூட்டிற்கு வியாழக்கிழமை (அக்டோபர் 3) ராணுவ விமானம் ஒன்றை கிரீஸ் அனுப்பியிருந்தது.