லெபனான் மீது ஆகாயத் தாக்குதல் நடத்துகிறது இஸ்ரேல்.
லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் இஸ்ரேல் கடுமையான ஆகாயத் தாக்குதல் நடத்தியிருக்கிறது.
புறநகர்ப் பகுதிகளில் ஹிஸ்புல்லாக்களின் நிலைகளைக் குறிவைத்தும் தாக்குதல் தொடர்ந்தது.
முன்னதாக, லெபனானின் தென் பகுதியில் 20 க்கும் மேற்பட்ட வட்டாரங்களில் வசிக்கும் மக்களை அந்நாட்டின் வட பகுதிக்குச் செல்லும்படி இஸ்ரேல் உத்தரவிட்டது.
ஹிஸ்புல்லாக்களின் தளபதி காதர் அலி தாவிலைக் (Khader Ali Tawil) கொன்றுவிட்டதாக இஸ்ரேல் சொல்கிறது. ஆனால், ஹிஸ்புல்லா அது குறித்து ஏதும் சொல்லவில்லை.
ஒருபுறம் ஹிஸ்புல்லாக்களுக்கு எதிரான தாக்குதல்; மறுபுறம் காஸாவிலும் தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ளது இஸ்ரேல்.
காஸாவின் டெய்ர் ஆல் பாலா (Deir al-Balah) நகரில் உள்ள ஒரு பள்ளிவாசல் மீது இஸ்ரேல் நடத்திய ஆகாயத் தாக்குதலில் 26 பேர் மாண்டனர்.
அல் – அக்ஸா மருத்துவமனை அருகே உள்ள அந்தப் பள்ளிவாசலில் இடம்பெயர்ந்த மக்கள் தஞ்சமடைந்திருந்தனர்.
ஹமாஸின் கட்டுப்பாட்டு நிலையம் அங்குச் செயல்பட்டதால் துல்லியமாகத் தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் சொன்னது.