இஸ்ரேலை உலுக்கிய ஹிஸ்புல்லா ஏவுகணைகள்; பத்து பேர் காயம்.
இஸ்ரேலின் மூன்றாவது ஆகப் பெரிய நகரமான ஹைஃபாவை ஹிஸ்புல்லா அமைப்பு பாய்ச்சிய ஏவுகணைகள் உலுக்கின.
இதில் பத்து பேர் காயமடைந்ததாக இஸ்ரேலிய ஊடகம் அக்டோபர் 7ஆம் தேதியன்று தெரிவித்தது.
ஹைஃபாவின் தென்பகுதியில் உள்ள ராணுவத் தளத்தைக் குறிவைத்து ஏவுகணைகளைப் பாய்ச்சியதாக ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளது.
கடலோரப் பகுதியில் உள்ள ஹைஃபா நகரத்தில் இரண்டு ஏவுகணைகள் வெடித்துச் சிதறியதாகவும் அங்கிருந்து ஏறத்தாழ 65 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள திபேரியாஸ் பகுதியை ஐந்து ஏவுகணைகள் உலுக்கியதாகவும் இஸ்ரேலிய ஊடகம் தெரிவித்தது.
இத்தாக்குதல் காரணமாகச் சில கட்டடங்களும் சொத்துகளும் சேதமடைந்ததாக இஸ்ரேலியக் காவல்துறை கூறியது.
பலருக்கு இலேசான காயங்கள் ஏற்பட்டதாகவும் அவர்கள் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
ஹிஸ்புல்லா பாய்ச்சிய ஏவுகணை, ஹைஃபா நகரம் மீது விழுந்து வெடித்துச் சிதறியதைக் காட்டும் காட்சி கண்காணிப்புக் கேமரா ஒன்றில் பதிவானது.
இதற்கிடையே, லெபனான் தலைநகர் பெய்ருட்டில் ஹிஸ்புல்லா அமைப்பின் உளவியல் பிரிவுக்குச் சொந்தமான இடங்களைத் தனது போர் விமானங்கள் தகர்த்ததாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது,
பெய்ருட்டில் இருந்த ஹிஸ்புல்லா அமைப்பின் ஆயுதக் கிடங்கு ஒன்றையும் அழித்துவிட்டதாக இஸ்ரேலிய ராணுவம் கூறியது.