பள்ளிக்கூடம் மீதும் பள்ளிவாசல் மீதும் இஸ்ரேலியப் படைகள் ஞாயிற்றுக்கிழமை தாக்குதல் : காஸாவில் 46 பேர் மரணம்.
காஸா வட்டாரத்தில் பாலஸ்தீனக் குடும்பங்கள் அடைக்கலம் புகுந்த பள்ளிக்கூடம் மீதும் பள்ளிவாசல் மீதும் இஸ்ரேலியப் படைகள் ஞாயிற்றுக்கிழமை தாக்குதல் நடத்தியதில் குறைந்தபட்சம் 26 பேர் மாண்டனர்.
அந்த உயிரிழப்புகளோடு மேலும் 20க்கும் மேற்பட்டோர் வடக்கு காஸாவில் சனிக்கிழமை முதல் நடத்தப்பட்ட தாக்குதலில் உயிரிழந்ததாக பாலஸ்தீன சுகாதார அதிகாரிகள் கூறினர்.
பல மாதங்களுக்குப் பிறகு வடக்கு காஸாவில் இஸ்ரேலிய ராணுவம் முதல்முறை தாக்குதல் நடத்தியதாக அவர்கள் கூறினர்.
ஆயினும், ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட தாக்குதல் மத்திய காஸாவின் டெயர் அல்-பலாஹா வட்டாரத்தில் நிகழ்ந்தது.
அங்குள்ள பள்ளிக்கூடத்திலும் பள்ளிவாசலிலும் ஹமாஸ் இயக்கத்தின் கட்டுப்பாட்டு மையம் இயங்கியதாகவும் அவற்றைக் குறி வைத்து தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேலிய ராணுவம் கூறியது.
ஆனால், பள்ளிக்கூடம், மருத்துவமனை, பள்ளிவாசல் போன்ற மக்கள் நடமாடும் பகுதிகளை தங்களது இயக்க நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தும் வழக்கம் இல்லை என்று ஹமாஸ் மறுத்துள்ளது.
“20 ஆண்டுகளாகச் செயல்பட்டு வரும் ஷுஹாடா அல்-அக்சா பள்ளிவாசல், பக்கத்து வட்டாரங்களில் இருந்து இடம்பெயர்ந்து வந்த மக்களுக்காக அடைக்கலம் கொடுத்தது. அங்கு தாக்குதல் நடத்தப்பட்டதை அறிந்து அதிர்ச்சியுற்றேன், என்று இமாம் அகமது ஃபிலீட் கூறினார்.
ஹமாஸ்-இஸ்ரேல் போரின் முதலாம் ஆண்டு நிறைவடையும் வேளையில் காஸாவில் புதிதாகத் தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.