போருக்கு எதிராக உலகம் முழுவதும் ஆர்ப்பாட்டம்.
காஸா வட்டாரத்தில் இஸ்ரேல் போரைத் தொடங்கி அக்டோபர் 7ஆம் தேதி ஓராண்டைத் தொடுகிறது. இந்த நிலையில் உலகம் முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் சனிக்கிழமை (அக்டோபர் 5) மத்திய கிழக்குப் போருக்கு எதிராக ஆயிரக்கணக்கானோர் வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.
சுமார் 40,000 பாலஸ்தீன ஆதரவாளர்கள் மத்திய லண்டன் வழியாக அணிவகுத்துச் சென்றனர்.
பாரிஸ், ரோம், மணிலா, கேப் டவுன் மற்றும் நியூயார்க் நகரங்களிலும் ஆயிரக்கணக்கானோர் கூடி ஆர்ப்பரித்தனர்.
அமெரிக்கா, அதன் நட்பு நாடான இஸ்ரேலுக்கு ஆதரவளிப்பதை எதிர்த்து வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகைக்கு அருகே ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
நியூயார்க் நகரத்தின் டைம்ஸ் சதுக்கத்தில் எதிர்ப்பாளர்கள் கறுப்பு-வெள்ளை துண்டை தலையிலும் தோளிலும் அணிந்து கொண்டு, “காஸா, லெபனான் நீங்கள் மீண்டு வருவீர்கள், மக்கள் உங்கள் பக்கம் இருக்கிறார்கள்,” உள்ளிட்ட முழக்கங்களை எழுப்பினர்.
இஸ்ரேலுக்கு எதிராக ஆயுதத் தடை விதிக்கக் கோரி பதாகைகளை அவர்கள் ஏந்தியிருந்தனர்.
இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையே பல ஆண்டுகளாக நீடிக்கும் மோதலின் உச்ச கட்டமாக 2023 அக்டோபர் 7ஆம் தேதி தெற்கு இஸ்ரேலுக்குள் புகுந்த ஹமாஸ் போராளிகள் தாக்குதலை நடத்தி சுமார் 250 பேரை பிணைப் பிடித்துச் சென்றனர். இந்தச் சம்பவத்தில் 1,200 பேர் கொல்லப்பட்டனர்.
இதையடுத்து காஸா மீது அடுத்தடுத்து இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் கிட்டத்தட்ட 42,000 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாக காஸா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. மேலும் காஸாவில் ஏறக்குறைய 2.3 மில்லியன் மக்கள் இடம்பெயர்ந்தனர். இது, காஸா மக்களின் பசி, பட்டினிக்கு வழி வகுத்தது. அடிப்படை சுகாதாரப் பராமரிப்புகூட இல்லாமல் காஸா மக்கள் தவித்தனர். இது, இனப் படுகொலைக்கு வழி வகுத்ததாக உலக நீதிமன்றம் குற்றம்சாட்டியது. ஆனால் இஸ்ரேல் இதனை மறுத்துள்ளது.
“நாங்கள் நல்லெண்ணத்துடன் இருந்தாலும் துரதிர்ஷ்டவசமாக இஸ்ரேலிய அரசாங்கம் எங்களை கவனிக்கவில்லை. காஸாவிலும் இப்போது லெபனானிலும் ஏமனிலும், அடுத்ததாக ஈரானிலும் இஸ்ரேல் அட்டூழியங்களைத் தொடர்கிறது,” என்று லண்டனில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆக்னஸ் கோரி என்பவர் கூறினார்.
“எங்களது பிரிட்டிஷ் அரசாங்கமும், துரதிர்ஷ்டவசமாக, இஸ்ரேலுக்கு ஆயுதங்களை தொடர்ந்து வழங்கி வருகிறது,” என்று அவர் குறிப்பிட்டார்.
உலகின் முஸ்லிம் பெரும்பான்மை நாடான இந்தோனீசியாவின் தலைநகரான ஜகார்த்தாவிலும் இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் வழங்குவதை வாஷிங்டன் நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையுடன் அமெரிக்க தூதரகம் அருகே ஞாயிற்றுக் கிழமை ( அக்டோபர் 6) காலை குறைந்தது 1,000 பாலஸ்தீனிய ஆதரவாளர்கள் கூடி முழக்கமிட்டனர்.
லண்டனில், பாலஸ்தீன ஆதரவாளர்கள் அணிவகுத்துச் சென்றபோது எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் இஸ்ரேலியக் கொடிகளை கையில் ஏந்தி அசைத்தனர்.
இந்த ஆர்ப்பாட்டங்கள் தொடர்பில் 15 பேர் கைது செய்யப்பட்டதாக காவல்துறை கூறியது. ஆனால் அவர்கள் எந்தத் தரப்பினர் என்பது பற்றி தகவல் இல்லை.
ரோம் நகரில் மோதல் வெடித்ததை அடுத்து, காவல்துறையினர் கண்ணீர்ப்புகை வீசியும் தண்ணீரைப் பீய்ச்சியடித்தும் கூட்டத்தை கலைத்தனர்.
ஹமாஸ் தாக்குதல் ஆண்டு நிறைவைக் கொண்டாடும் அக்டோபர் 7ஆம் தேதிக்கு முன்பு நகர மையத்தில் அணிவகுத்துச் செல்வதற்கான தடையை மீறி சுமார் 6,000 பேர் ஊர்வலமாகச் சென்றனர்.