பெண்ணின் வயிற்றில் 2 கிலோகிராம் முடி : அகற்றிய மருத்துவர்கள்.

உத்தரப் பிரதேசத்தில் வயிற்று வலியால் அவதியுற்ற பெண்ணுக்கு அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள், அப்பெண்ணின் வயிற்றிலிருந்து 2 கிலோகிராம் முடியை அகற்றியுள்ளனர்.

பெய்ரேலியைச் சேர்ந்த 31 வயது பெண் ஒருவர் தமது 16 வயது முதல் கடுமையான வயிற்று வலியால் பாதிக்கப்பட்டார். பல தனியார் மருத்துவமனைகளுக்குச் சென்று தொடர் சிகிச்சை எடுத்தும் எந்த முன்னேற்றமும் இல்லை. மீண்டும் மீண்டும் வயிற்று வலியால் துடிக்க, கடந்த மாதம் 22ம் தேதி பெய்ரேலி அரசு மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டார்.

பல பரிசோதனைகளுக்குப் பிறகு, அந்தப் பெண்ணுக்கு அறுவை சிகிச்சை செய்ய மருத்துவக் குழு முடிவு செய்தது. அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்களுக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது.

அந்தப் பெண்ணின் வயிற்றிலிருந்து 2 கிலோகிராம் முடி கண்டுபிடிக்கப்பட்டதே அதற்குக் காரணம். அந்த முடிதான் அப்பெண்ணின் வயிற்று வலிக்குக் காரணமாக இருந்துள்ளதாக மருத்துவர்கள் கூறினர்.

அந்தப் பெண்ணுக்கு அரிய உளவியல் பிரச்சினை இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. அது, ‘ட்ரிக்கோஃபேஜியா’ (trichophagia) என்று அழைக்கப்படுகிறது. அதுபோன்ற பிரச்சினை உடையவர்கள் தங்களை அறியாமலேயே முடியைச் சாப்பிடுவார்கள்.

சிறுவயதிலிருந்தே அந்தப் பெண்ணுக்கு அத்தகைய பிரச்சினை இருந்துள்ளது. பெய்ரேலி பகுதியில் கடந்த 25 ஆண்டுகளில் அத்தகைய பிரச்சினையைக் கொண்ட ஒரே பெண் அவர்தான்.

இந்நிலையில், சரியான முறையில் அறுவை சிகிச்சை செய்து முடிக்கப்பட்டுள்ளதாகவும் பாதிக்கப்பட்ட பெண் நலமாக இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.