பெண்ணின் வயிற்றிலிருந்து அகற்றப்பட்ட 2 கிலோ முடி!
உத்தரப் பிரதேச மாநிலம் பரேலி பகுதியைச் சேர்ந்த 21 வயது பெண்ணின் வயிற்றில் இருந்து சுமார் 2 கிலோ எடையுள்ள தலைமுடி, அறுவை சிகிச்சை மூலம் மருத்துவர்களால் அகற்றப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.
சுபாஷ்நகர் கர்கைனா பகுதியைச் சேர்ந்த 21 வயது பெண் ஒருவர், கடந்த 5 ஆண்டுகளாக கடும் வயிற்று வலியால் அவதியுற்று வந்தார். அப்பெண்ணின் குடும்பத்தினர் பல தனியார் மருத்துவர்களிடம் ஆலோசனை செய்தபிறகும், நோய்க்கான காரணத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை.
இறுதியாக, அப்பெண்ணின் குடும்பத்தினர், மாவட்ட மருவத்துவமனைக்கு அழைத்துச் சென்று, சிடி ஸ்கேன் பரிசோதனை செய்து பார்த்தபோது, வயிற்றுக்குள் மனித முடி இருந்தது தெரிய வந்தது.
கடந்த வாரம் முன்பு, அப்பெண் மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து, அறுவை சிகிச்சையின் மூலம் அவரது வயிற்றில் இருந்து கிட்டத்தட்ட 2 கிலோ எடையுள்ள தலைமுடி மருத்துவர்களால் அகற்றப்பட்டது.
அப்பெண்ணிடம் மருத்துவர்கள் ஆலோசனை மேற்கொண்டதில், 16 ஆண்டுகளாக தன்னுடைய தலைமுடியை அவர் ரசிகசியமாக சாப்பிட்டு வந்தது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து, சில மாதங்களுக்கு அப்பெண்ணிற்கு மனநல ஆலோசனை வழங்கும் சிகிச்சையை தொடங்கியுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
அறுவை சிகிச்சை மேற்கொண்ட மருத்துவர்கள் கூறுகையில், முடி சாப்பிடும் விநோத நோய் அப்பெண்ணுக்கு இருந்ததாகவும், அதிக முடி வயிற்றில் சேர்ந்ததால் அப்பெண்ணால் உணவு சாப்பிட முடியால் அவதியுற்றதாகவும் தெரிவித்தனர்.
கடந்த வெள்ளிக்கிழமை மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு அப்பெண், பூரண ஆரோக்கியத்துடன் ஓய்வெடுத்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.