ஜெனிவா மனித உரிமைகள் சபையில் இலங்கைக்குக் கைகொடுக்கும் சீனா!
ஜெனிவா மனித உரிமைகள் சபையில்
இலங்கைக்குக் கைகொடுக்கும் சீனா.
கோட்டாவிடம் யாங் ஜியேச்சி குழுவினர் நேரில் தெரிவிப்பு.
ஐ.நா. மனித உரிமைகள் சபை உள்ளிட்ட சர்வதேச அரங்கில் இலங்கை எதிர்நோக்கக்கூடிய நெருக்கடி நிலைமைகளின்போது சீனா இலங்கைக்குத் தொடர்ந்தும் கைகொடுத்து உதவும் என்று கொழும்பு வந்துள்ள சீன தூதுக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள சீன கம்யூனிசக் கட்சியின் அரசியல் குழு உறுப்பினர் யாங் ஜியேச்சி தலைமையிலான சீனத் தூதுக்குழுவினர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை நேற்று சந்தித்துப் பேச்சு நடத்தினர்.
இரு நாட்டு நட்புறவு, இலங்கையில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள், கொழும்பு துறைமுக நகரத் திட்டத்தின் அடுத்தகட்ட நகர்வுகள், தேசிய அரசியல் விவகாரங்கள் மற்றும் சர்வதேச அரங்கில் இலங்கை சந்திக்கும் நெருக்கடி நிலைமைகள் குறித்து இந்தப் பேச்சுக்களின்போது முக்கிய கவனம் செலுத்தப்பட்டிருந்தது.
இலங்கை சர்வதேச மட்டத்தில் எதிர்கொண்டு வருகின்ற நெருக்கடிகள் தொடர்பில் சீனாவின் நிலைப்பாட்டை தூதுக்குழுவினர் இதன்போது முன்வைத்துள்ளனர்.
குறிப்பாக, ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இலங்கை எதிர்கொள்ளக்கூடிய நெருக்கடி நிலைமையின்போது இலங்கைக்கு உறுதுணையாக சீனா இருக்கும் என்று தூதுக்குழுவினர் உறுதியளித்துள்ளனர்.
சர்வதேச அரங்கில் இலங்கையின் இறையாண்மையையும் சுயாதீனத்தையும் பாதுகாக்க சீனா எப்போதுமே முன்னிற்கும் என்றும் அவர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, யாங் ஜியேச்சி தலைமையிலான உயர்மட்டக் குழுவினர் பிரதமர் மஹிந்த ராஜபக்சவையும் சந்தித்து பேச்சு நடத்தியுள்ளனர்.
கொரோனா வைரஸ் பரவலுக்கு எதிரான போராட்டத்திலும் பொருளாதார நடவடிக்கைகளிலும் சீனாவுடன் இணைந்து பணியாற்ற விரும்புவதாக இந்தச் சந்திப்பின்போது பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
மேலும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச விரைவில் சீனாவுக்கான விஜயத்தை முன்னெடுக்க வேண்டும் என்றும் சீனத் தூதுக்குழுவினர் அழைப்பு விடுத்துள்ளனர்.
உலகளாவிய கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில் சீனாவின் உயர்மட்ட இராஜதந்திரக் குழுவினர் தெற்காசிய பிராந்தியத்தில் சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் முதலாவது சந்தர்ப்பம் இது என்பது குறிப்பிடத்தக்கது.