போலித் தேசியவாதிகளை அடியோடு நிராகரியுங்கள்! முழு ஆதரவையும் எங்களுக்குத் தமிழ் மக்கள் வழங்க வேண்டும் என்கிறார் கஜேந்திரகுமார்.
“தமிழ்த் தேசிய நீக்கம் செய்யும் போலித் தேசியவாதிகளை அடையாளம் கண்டு தமிழ்த் தேசியக் கொள்கையுடன் நேர்மையாகப் பயணிக்கின்ற எமக்கு ஒட்டுமொத்த ஆதரவையும் தமிழ் மக்கள் வழங்க வேண்டும். இதனூடாக நடைபெறப் போகின்ற மாற்றம் என்பது தமிழ்த் தேசியக் கொள்கையுடன் தடம் மாறாமல் பயணிக்கிற எங்களுக்கான அங்கீகாரமாகப் பார்க்கின்றோம்.”
இவ்வாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.
நாடாளுமன்றத் தேர்தலுக்கான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கான வேட்புமனுவை நேற்று திங்கட்கிழமை தாக்கல் செய்த பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் வடக்கு, கிழக்கு தமிழர் தாயக நிலப்பரப்பிலுள்ள அனைத்து இடங்களிலும் நாங்கள் போட்டியிடவுள்ளோம். அதன் முதல் கட்டமாக இங்கும் அதனைத் தொடர்ந்து ஏனைய இடங்களிலும் வேட்புமனுவைத் தாக்கல் செய்யவுள்ளோம்.
தமிழ் மக்களைப் பொறுத்த வரையில் இந்தத் தேர்தல் ஒரு திருப்புமுனையாகும். அதுவும் எமது அமைப்பின் அரசியலுக்கு மட்டுமல்லாது தமிழ்த் தேசிய அரசியலுக்கும் ஒரு திருப்பு முனையாகவுள்ளது.
தமிழர் தரப்பில் உள்ளவர்கள் 2009 இற்குப் பின்னர் தமிழ்த் தேசியத்தை நீக்கம் செய்யும் அரசியலையே நேரடியாகவும மறைமுகமாகவும் முன்னெடுத்து வந்தனர்.
ஆனால், தமிழ்த் தேசியத்தை நோக்கிப் பயணிக்கின்ற ஒரேயொரு தரப்பு நாங்கள் மட்டும்தான். ஆகையினால் தமிழ்த் தேசியத்துக்கு மக்கள் வழங்குகின்ற ஆணையாக இந்தத் தேர்தலைப் பார்க்கின்றோம்.
கடந்த ஜனாதிபதி தேர்தலில் தென்னிலங்கை அரசியலில் பாரிய மாற்றம் ஏற்பட்டிருக்கின்றது. அதேபோன்றே தமிழர் தாயகம்திலும் பெரிய மாற்றம் நடக்குமான எதிர்பார்க்கின்றோம்.
குறிப்பாக கடந்த காலங்களில் தமிழ்த் தேசியத்தைப் பேசிக் கொண்டு அதற்கு மாறாகச் செயற்பட்டவர்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து தமிழ்த் தேசியத்துடன் பயணிக்கின்ற எமக்கு ஆணையைக் கொடுக்கக் கூடிய தேர்தலாகப் பார்க்கின்றோம்.
எமது அமைப்பினுடைய நேர்மையான அரசியல் நிலைப்பாட்டை மக்களிடத்தே கெண்டு செல்வதற்குப் பல்வேறு சவால்கள் இருந்த போதிலும் அதனையெல்லாம் தாண்டியும் மக்களிடத்தே அதனை நாம் கொண்டு சென்றிருக்கின்றோம்.
இதனால் போலித் தேசியவாதிகளை மக்களும் இனங்கண்டுள்ள நிலையில் தடம்மாற கொள்கையுடன் நேர்மையான அரசியலை முன்னெடுக்கின்ற எமது அமைப்புக்கு ஒட்டுமொத்த ஆதரவையும் வழங்க வேண்டும் எனக் கோருகின்றோம்.
இதனூடாக நடைபெறப் போகின்ற மாற்றம் என்பது தமிழ்த் தேசிய கொள்கையுடன் நேர்மையாகவும் உண்மையாகவும் பயணிக்கின்ற எங்களுக்கான அங்கீகாரமாகப் பார்க்கின்றோம்.
எனவே, இன்றைக்கு மக்களும் உண்மைகளை உணர்ந்துள்ள நிலையில் நிச்சயம் மாற்றமொன்று ஏற்படும். அந்த மாற்றத்தின் ஊடாக தமிழர் தேசத்தில் அமோக வெற்றியுடன் நாம் மீண்டும் சந்திப்போம்.” – என்றார்.