வேட்பாளர் பட்டியலால் தமிழரசுக்குள் குழப்பம்.

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் இலங்கைத் தமிழரசுக் கட்சி சார்பில் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும் வேட்பாளர்களின் பெயர்ப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில், அது குறித்து கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் பலரும் அதிருப்தியடைந்துள்ளனர்.

எதிர்வரும் நவம்பர் மாதம் 14 ஆம் திகதி நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சார்பில் யாழ். தேர்தல் மாவட்டத்தின் போட்டியிடவிருக்கும் வேட்பாளர்களின் பெயர்கள் அக்கட்சியின் தேர்தல் நியமனக் குழுவால் நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்பட்டது.

அதன்படி யாழ்ப்பாணம் தேத்தல் மாவட்ட வேட்பாளர்களாக சிவஞானம் சிறீதரன், எம்.ஏ.சுமந்திரன், எஸ்.சி.சி.இளங்கோவன், கேசவன் சயந்தன், சந்திரலிங்கம் சுகிர்தன், சுரேக்கா சசீந்திரன், இம்மானுவல் ஆர்னோல்ட், கிருஷ்ணவேணி சிறீதரன், தியாகராஜா பிரகாஷ் ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.

இருப்பினும் இந்தப் பெயர்ப்பட்டியலில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களின் பெயர்கள் உள்வாங்கப்பட்டிருக்கவில்லை. இதனையடுத்து கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா தமிழரசுக் கட்சியிலிருந்து விலகுவதாக நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு அறிவித்தார்.

இதேவேளை, தமிழரசுக் கட்சியின் வேட்பாளர் தெரிவில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் அடாவடித்தனமாகப் பல்வேறு குளறுபடிகளைச் செய்து தனக்கு வேண்டியவர்களுக்கு நியமனத்தைக் கொடுத்துள்ளார் என்று குற்றஞ்சாட்டிய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாமனிதர் நடராஜா ரவிராஜின் பாரியாரும் தமிழரசுக் கட்சியின் தென்மராட்சி உறுப்பினருமான சசிகலா ரவிராஜ், கட்சியிலிருந்து நேற்று திங்கட்கிழமை விலகியதுடன் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்ட வேட்பாளராக வேட்புமனுவில் கையெழுத்தும் இட்டார்.

தவராசா மற்றும் சசிகலா மாத்திரமன்றி கட்சியின் மேலும் சில சிரேஷ்ட உறுப்பினர்களும் இந்த வேட்பாளர் பட்டியல் தொடர்பில் கடும் அதிருப்தியடைந்திருந்த நிலையில், தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சோ.சேனாதிராஜா நேற்று திங்கட்கிழமை கட்சியின் தலைவர் பதவியிலிருந்து விலகினார்.

இந்நிலையில், எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழரசுக் கட்சி சார்பில் யாழ். தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும் வேட்பாளர்களின் பெயர்ப்பட்டியலில், மக்கள் மத்தியில் செல்வாக்குடைய சிரேஷ்ட உறுப்பினர்களின் பெயர்கள் ஏன் உள்வாங்கப்படவில்லை என்றும், அதற்குரிய நியாயமான காரணங்கள் என்ன என்றும் கட்சியின் பொதுச்செயலாளர் ப.சத்தியலிங்கத்திடம் வினவியபோது அதற்கு அவர் பின்வருமாறு பதிலளித்தார்.

“இந்தத் தீர்மானம் கட்சியின் தேர்தல் நியமனக் குழுவினால் எடுக்கப்பட்ட தீர்மானமாகும். தேர்தலில் போட்டியிடுவதற்கு விருப்பம் தெரிவித்து அதிக எண்ணிக்கையான விண்ணப்பங்கள் வரும்போது, அவற்றை ஆராய்ந்து அதில் பொருத்தமான விண்ணப்பங்களை மாத்திரம் தெரிவுசெய்யவேண்டிய கட்டாயம் ஏற்படும்.

எனவே, இம்முறை நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவிருக்கும் வேட்பாளர்களைத் தெரிவு செய்வதற்கான செயன்முறையொன்று நியமனக் குழுவால் வகுக்கப்பட்டு, அதற்கு அமைவாகவே வேட்பாளர் தெரிவு இடம்பெற்றது.

எனவே, இவ்வாறானதொரு பின்னணியில் சிலர் ஏன் தெரிவு செய்யப்படவில்லை என்பதற்குத் தனித்தனியாகக் காரணம் கூறுவது சாத்தியமற்றதாகும்.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.