தமிழ், சிங்கள, முஸ்லிம் வேட்பாளர்களை களமிறக்கிக் கொழும்பில் ஈ.பி.டி.பி. போட்டி – டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு.
கொழும்பு மாவட்டத்தில் தமிழ், சிங்கள, முஸ்லிம் வேட்பாளர்களை முன்னிறுத்தியும், வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அனைத்து மாவட்டங்களிலும் போட்டியிடுவோம் என்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்துக்குரிய வேட்புமனுவை நேற்று திங்கட்கிழமை தாக்கல் செய்தபின் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் கொழும்பு மாவட்டம் மற்றும் வடக்கு, கிழக்கு மாகாணங்களின் அனைத்து மாவட்டங்களிலும் போட்டியிடவுள்ளோம். விசேடமாக கொழும்பில் எங்களுடைய ஆதரவாளர்கள், பொதுமக்கள் இம்முறை போட்டியிடுமாறு கோரிக்கையை முன்வைத்தமையால் நாங்கள் இம்முறை கொழும்பிலும் போட்டியிடவுள்ளோம்.
கொழும்பிலே தமிழ், சிங்கள, முஸ்லிம் வேட்பாளர்களை முன்னிறுத்திப் போட்டியிடவுள்ளோம். எல்லா இனங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தி தேசிய நல்லிணக்கத்தை வெளிப்படுத்தும் முகமாக எங்கள் வேட்பாளர் தெரிவு அமையும்.
புத்தளம் மாவட்டத்தில் போட்டியிடுமாறும் அப் பிரதேச மக்கள் கேட்டிருந்தார்கள். எனினும், குறுகிய காலத்துக்குள் போட்டியிட முடியாது என்பதால் நாம் இம்முறை அங்கு போட்டியிடவில்லை.
“மத்தியில் கூட்டாட்சி! மாநிலத்தில் சுயாட்சி!!” என்ற எங்களுடைய இலக்கை அடைவதற்காக எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் எங்களுக்கு அமோக வாக்களித்து எங்களை வெற்றி பெறச் செய்வார்கள் என நம்புகின்றேன்.” – என்றார்.