சிறைத் தண்டனையை அனுபவிக்க சிங்கப்பூர் நீதிமன்றத்துக்கு வந்த ஈஸ்வரன்.
முன்னாள் போக்குவரத்து அமைச்சர் எஸ். ஈஸ்வரன், தனக்கு விதிக்கப்பட்ட 12 மாதச் சிறைத் தண்டனையை நிறைவேற்ற திங்கட்கிழமை (அக்டோபர் 7) பிற்பகல் 3.32 மணிக்கு நீதிமன்றத்தைச் சென்றடைந்தார்.
4A நீதிமன்றத்துக்குப் போகும்போது உறவினர் ஒருவர் ஈஸ்வரனுடன் இருந்தார். திங்கட்கிழமை மாலை நான்கு மணிக்குள் சரணடைய அவருக்குக் கெடு விதிக்கப்பட்டிருந்தது.
உயர் நீதிமன்றம் தனக்கு விதித்த சிறைத் தண்டனைக்கு எதிராக மேல்முறையீடு செய்யப்போவதில்லை என்று ஈஸ்வரன் பிற்பகல் 1.20 மணியளவில் தெரிவித்திருந்தார்.
திங்கட்கிழமையன்று ஃபேஸ்புக்கில் அறிக்கை மூலம் 62 வயது ஈஸ்வரன் அதனைத் தெரிவித்தார். தனக்கு விதிக்கப்பட்ட ஓராண்டுச் சிறைத் தண்டனையை திங்கட்கிழமை முதல் நிறைவேற்றத் தொடங்குவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
“அமைச்சர் பொறுப்பில் இருந்தபோது நான் செய்தது சட்டப் பிரிவு 165க்குக்கீழ் தவறு என்பதை ஏற்றுக்கொள்கிறேன். எனது செயல்களுக்கு நான் முழுப் பொறுப்பேற்கிறேன். எல்லா சிங்கப்பூரர்களிடமும் நிபந்தனையின்றி மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்,” என்றார் ஈஸ்வரன்.
நீதிமன்ற விசாரணை 2025ஆம் ஆண்டிலும் தொடர்ந்தால் அது தனது குடும்ப நலனை பாதிக்கக்கூடும், தனக்கு நெருங்கியவர்களுக்கு மனத்தளவில் சுமையைத் தரக்கூடும்; அவற்றைக் கருத்தில்கொண்டு மேல்முறையீட்டைக் கைவிடும் முடிவு எடுத்ததாக அவர் சொன்னார்.
“ஏற்கெனவே கடந்த 15 மாதங்கள் அதற்கு முன்பு இல்லாத அளவில் சவாலாக இருந்துவிட்டன. இந்த முடிவை எடுத்ததைத் தொடர்ந்து எங்கள் வலியையும் வேதனையையும் ஒதுக்கிவிட்டு வருங்காலத்தை நோக்கிச் சென்றபடி எங்களின் வாழ்க்கையை மீண்டும் தொடங்கும் நம்பிக்கையை நாங்கள் கொண்டுள்ளோம்,” என்றும் அவர் கூறினார்.
அரசாங்க ஊழியராக இருந்தபோது விலையுயர்ந்த பொருள்களை அன்பளிப்பாகப் பெற்றது, நீதி நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவித்தது ஆகியவற்றின் தொடர்பில் தன் மீது சுமத்தப்பட்ட ஐந்து குற்றச்சாட்டுகளை ஈஸ்வரன் ஒப்புக்கொண்டார். அதனைத் தொடர்ந்து கடந்த வியாழக்கிழமையன்று (அக்டோபர் 3) அவருக்கு ஓராண்டுச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
ஈஸ்வரனுக்கு ஆறிலிருந்து ஏழு மாதங்கள் வரையிலான சிறைத் தண்டனை விதிக்குமாறு அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் கேட்டுக்கொண்டனர். இறுதியில் அதில் கிட்டத்தட்ட இரு மடங்கு காலத்துக்கு அவருக்குச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
ஈஸ்வரனுக்கு எட்டு வாரங்களுக்கு அதிகமான சிறைத் தண்டனை விதிக்காமல் இருக்குமாறு அவரின் வழக்கறிஞர் தவிந்தர் சிங் கேட்டுக்கொண்டிருந்தார்.