கைக் குழந்தையை இணையத்தில் விற்ற தந்தை.
இந்தோனேசியாவில் தம்முடைய 11 மாதக் குழந்தையை இணையத்தில் விற்பனை செய்த சந்தேகத்தில் ஆடவர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
மேற்கு ஜக்கர்த்தாவில் உள்ள டங்கராங் (Tangerang) எனும் பகுதியில் அந்த 36 வயது ஆடவர் கைதானார்.
RA என்று அதிகாரிகளால் அடையாளம் காணப்பட்ட அவர் குழந்தையை விற்ற பணத்தைத் தம்முடைய சொந்தத் தேவைகளுக்கும் சூதாட்டத்திற்கும் பயன்படுத்தியதாகச் சந்தேகிக்கப்படுகிறது.
குழந்தையை வாங்கியவர்கள் ஆள்கடத்தல் கும்பல்களோடு சம்பந்தப்பட்டிருக்கக்கூடும் என்ற சந்தேகத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
அந்தச் சம்பவம் இம்மாதம் (அக்டோபர்) முதலாம் தேதி வெளிச்சத்திற்கு வந்ததாகக் காவல்துறை தெரிவித்தது.
அன்று குழந்தையின் தாயார் வேலை முடிந்து வீட்டிற்குத் திரும்பியவுடன் குழந்தையைத் தேடியிருக்கிறார்.
குழந்தையைக் காணவில்லை என்று தெரிந்தவுடன் RA-யிடம் அவர் பலமுறை கேட்டார்.
பிறகு RA குழந்தையை விற்றுவிட்டதை ஒப்புக்கொண்டார்.
அந்தப் பெண் பிறகு RA-யைக் காவல்துறை நிலையத்திற்கு அழைத்துச் சென்று புகாரளித்தார்.