ஐ.நா. தீர்மானத்துக்கு அநுர அரசும் எதிர்ப்பு – போர்க் குற்ற ஆதாரங்களைச் சேகரிக்கும் பொறிமுறையையும் ஏற்றுக்கொள்ளாதாம்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் அமர்வில் சமர்ப்பிக்கப்படும் எந்தவொரு தீர்மானத்தின் 51/1 நகல் வடிவையும் இலங்கை தொடர்ந்து எதிர்க்கும் என்று அமைச்சரவைப் பேச்சாளரான அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
இலங்கையில் இடம்பெற்ற போர்க் குற்றங்கள் குறித்த ஆதாரங்களை சேகரிக்கும் வெளிப்புற பொறிமுறைக்கான அதிகாரங்களை நீடிக்கும் எந்தத் தீர்மானத்தையும் இலங்கை ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
அமைச்சரவையின் தீர்மானங்களை அறிவிக்கும் இன்றைய செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் தற்போதைய அமர்வில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள தீர்மானத்தின் நகல் வடிவை நிராகரிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
எனினும், உள்நாட்டுப் பொறிமுறை மூலம் நல்லிணக்கம் உட்பட மனித உரிமைகள் பிரச்சினைகளுக்குத் தீர்வைக் காண்பது குறித்து அரசு அர்ப்பணிப்புடன் உள்ளது என்றும் அவர் கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“இலங்கையில் புதிய ஜனாதிபதி தெரிவு செய்யப்பட்டுள்ளார். நாடாளுமன்றத் தேர்தலின் பின்னர் புதிய அரசு தெரிவு செய்யப்படும்.
நாங்கள் எங்கள் நிலைப்பாட்டை ஜெனிவாவுக்குத் தெரியப்படுத்துவோம்.
இந்தத் தீர்மானத்தில் உள்ள பல விடயங்களை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது.
மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கு இலங்கை அரசு நடவடிக்கை எடுக்கும். எனினும், இதற்குக் காலம் தேவை. நாளை புதன்கிழமை ஜெனிவாவில் இந்த நிலைப்பாட்டைத் தெரியப்படுத்துவோம்.” – என்றார்.