கொல்கத்தா மருத்துவமனையில் 50 மருத்துவர்கள் ராஜிநாமா!
கொல்கத்தா ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் மூத்த மருத்துவர்கள் 50 பேர் ஒரே நேரத்தில் ராஜிநாமா செய்துள்ளனர்.
கொல்கத்தாவில் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கில் நீதி கிடைக்கக் கோரி இளம் மருத்துவர்கள் பலரும் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் மூத்த மருத்துவர்கள் 50 பேர் இன்று தங்களது ராஜிநாமா கடிதத்தை நிர்வாகத்திடம் வழங்கியுள்ளனர்.
அரசு மருத்துவமனைகளின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த தலைவர்கள் கூட்டத்தில் இன்று காலை இந்த முடிவு எடுக்கப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
“அனைத்துத் துறைத் தலைவர்கள் முன்னிலையில் இந்த முடிவை எடுத்துள்ளோம். ஆர்.ஜி.கார் மருத்துவமனையின் மூத்த மருத்துவர்கள் 50 பேரும் ராஜிநாமா கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளோம். நீதி கிடைப்பதற்காக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளம் மருத்துவர்களுக்கு துணை நிற்பதற்காக இந்த முடிவை எடுத்துள்ளோம்” என்று அவர்கள் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து என்.ஆர்.எஸ் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் மூத்த மருத்துவர்கள் பலரும் ஆர்.ஜி. கர் மருத்துவர்களைப் போலவே ராஜிநாமா செய்யத் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆர்.ஜி. கர் மருத்துவமனையில் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட பயிற்சி மருத்துவரின் கொலைக்கு நீதி கிடைக்கவும், ஊழல் நிறைந்த மருத்துவத் துறையின் அவலங்களை வெளிச்சத்திற்குக் கொண்டு வருவதற்காகவும் மேற்கு வங்கத்தில் இளம் மருத்துவர்கள் பலரும் உண்ணவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர். இதற்கு ஆதரவு தெரிவிக்க தற்போது மூத்த மருத்துவர்களும் களமிறங்கியுள்ளனர்.
இளம் மருத்துவர்கள், சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை அறிவித்து கடந்த 4 நாள்களாக மேற்கொண்டு வருகின்றனர். ஆனால், தற்போது வரை அரசு அதிகாரிகளிடம் இருந்து எந்தப் பதிலும் இல்லை என்று கூறப்படுகிறது.