ராஜபக்சக்களுக்கு எதிரான விசாரணைகள் மீண்டும் ஆரம்பம் : வசந்த சமரசிங்க.
ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற அனைத்து ஊழல் மோசடிகள் தொடர்பிலும் மீண்டும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்குழு உறுப்பினர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், கடந்த ஆட்சியில் சர்ச்சையை ஏற்படுத்திய அனைத்து குற்றச்சாட்டுகளும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.
“இரண்டு வாரங்களாக அரசாங்கம் விசாரணையைத் தொடங்கியுள்ளது. எதிரிகள் கலக்கமடைந்துள்ளனர். பிணைமுறி மோசடி, ஈஸ்டர் தாக்குதல், லசந்த விக்ரமதுங்க கொலை, தாஜுதீன் கொலை, எக்னலிகொட காணாமல் போனமை , 11 தமிழ் இளைஞர்கள் காணாமல் போனமை, மலஜலம் உர கப்பலுக்கு பணம் கொடுத்தமை , எயார்பஸ் பேரம், ஆகிய சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகள் தொடங்கியுள்ளன.
உகாண்டாவை காட்டிவிட்டு பாட்டி டெய்சியின் ரத்தின பையை விசாரிக்காமல் விடுவோம் என நினைக்கும் நாமல் ராஜபக்ச, உகாண்டாவை நினைத்து துபாய் கணக்குகளில் பணம் எப்படி மாற்றப்பட்டது என்பதை கண்டு பிடிக்க மாட்டோம் என நாமல் ராஜபக்ச நினைக்கிறார். ரவி வைத்தியலங்கார டீலில் புதைந்துள்ள கோப்புகளை வெளியே எடுக்க மாட்டோம் என நினைக்கிறார்கள்.
உகண்டாவில் இருந்து விமானத்தில் ராஜபக்சவினரது திருமணங்களுக்கு வரும்போது எப்படி வந்தார்கள், போனார்கள் என்றும் தேடுவோம். உகண்டா மட்டுமின்றி எந்த அபுதாபியில் இருந்தாலும் , ராஜபக்சேவினரது ஊழல்களை எல்லாம் தேடி வருகிறோம். எனவே, திருடர்கள் செய்த திருட்டுகள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது” என்றார் வசந்த சமரசிங்க .