சிங்கப்பூர் ஈஸ்வரனுக்குச் சிறையில் எப்படியான அறை?
முன்னாள் போக்குவரத்து அமைச்சர் எஸ் ஈஸ்வரனுக்குச் சிறையில் ஒருவர் தங்கும் சிற்றறை வழங்கப்பட்டுள்ளதாக சிங்கப்பூர் சிறைத்துறை தெரிவித்துள்ளது.
சிறைச்சாலையில் ஈஸ்வரன் உட்படக் கைதிகள் அனைவருமே ஒரே மாதிரியாகத்தான் நடத்தப்படுவார்கள்; அனைவருக்குமே ஒரே மாதிரியான விதிமுறைகள்தான் என்று சிறைத்துறைப் பேச்சாளர் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் கூறினார்.
“சிறைக்கு வந்தபின் கைதிகளின் தனிப்பட்ட உடைமைகள் அவர்களிடமிருந்து பெறப்படும். பின்னர் அவற்றைப் பாதுகாப்பதற்காக ஆவணப்படுத்தப்படும். கைதிகளிடம் சட்டவிரோதப் பொருள்கள் ஏதும் இருக்கின்றனவா என்று சோதிக்கப்படும். அதன் பிறகு சிறைச்சாலை மருத்துவர் அவர்களைச் சோதிப்பார்,” என்று பேச்சாளர் குறிப்பிட்டார்.
முன்னதாக, அக்டோபர் 7ஆம் தேதி பிற்பகல் 3.30 மணியளவில் ஈஸ்வரன் நீதிமன்றத்தைச் சென்றடைந்தார். அங்கிருந்து நீதிமன்றச் சிறை அறைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவர் பின்னர் கீழ்த்தளத்திலுள்ள கார் நிறுத்துமிடத்தில் காத்திருந்த வேன் மூலம் சாங்கி சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
62 வயதாகும் ஈஸ்வரனுக்கு 12 மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அவர் உயர்பதவி வகித்த குற்றவாளிகளுக்கான ‘பி’ குழுமச் சிறையில் அடைக்கப்படுவார் என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் அறிகிறது.
சிறைச்சாலையில் சோதனைகள் நிறைவடைந்தபின் கைதிகளுக்குச் சிறையில் அணியும் உடைகளும் பல்துலக்கி, பற்பசை, செருப்புகள், துண்டு, உணவுண்ண பிளாஸ்டிக் கரண்டி போன்றவை வழங்கப்படும்.
ஈஸ்வரனுக்குப் பாதுகாப்பை முன்னிட்டு ஒருவர் தங்கும் சிற்றறை வழங்கப்பட்டதாகப் பேச்சாளர் தெரிவித்தார்.
அவருக்குக் கட்டில் வழங்கப்படவில்லை. கோரைப்பாயும் இரண்டு போர்வைகளும் வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டது.
சிறை அறைகளில் கழிப்பறை வசதி இருக்கும். பாதுகாப்புக் காரணங்களுக்காக மின்விசிறி கிடையாது.
சிறை அறையில் மின்கற்றலுக்கான வசதிகளும் மின்னூல்களும் கிடைக்கும் எனக் கூறப்பட்டது.
ஈஸ்வரனுக்கு மாதம் இருமுறை பார்வையாளர்களைச் சந்திக்கவும் அதிகபட்சம் நான்கு மின்னஞ்சல்கள் எழுதவும் அனுமதி உண்டு.
அன்றாடம் குறைந்தது ஒரு மணி நேரம் அறையிலிருந்து வெளியேறி விளையாட்டு, உடற்பயிற்சி போன்றவற்றில் ஈடுபடலாம். செய்தித்தாள்கள், தொலைக்காட்சி போன்றவையும் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.
கைதிகளுக்கு ஒரு நாளில் மூன்று முறை உணவு வழங்கப்படும். உணவு வல்லுநரின் பரிந்துரையிப்படி, தேவையான ஊட்டச்சத்துகள் அடங்கிய உணவு வழங்கப்படும்.