இனி என் வாழ்நாளை அவரது வெற்றிடத்தை நிரப்ப முயற்சிப்பேன்…ரத்தன் டாடாவின் இளம் மேளாளர் சாந்தனு பதிவு
ரத்தன் டாடாவின் மிகவும் நெருங்கிய மற்றும் நம்பிக்கைக்கு உரிய டாடா குழுமத்தின் மிக இளம் பொதுமேலாளர் சாந்தனு நாயுடு தனது சமூக வலைத்தளப் பக்கத்தில், இரங்கல் செய்தியை பகிர்ந்துள்ளார்.
தொழிலதிபரும், உலகமே புகழும் மாமனிதருமான ரத்தன் டாடா, தனது 86 வயதில், உடல்நலக் குறைவால் புதன்கிழமை இரவு காலமானார்.
அவரது மறைவுக்கு நாட்டு மக்கள் அனைவரும் தங்களது மனதால் இரங்கல் தெரிவித்து தங்களது கண்ணீர் அஞ்சலியை செலுத்தி வருகிறார்கள். ரத்தன் டாடா உடலுக்கு மரியாதை செலுத்த கட்சி பாகுபாடில்லாமல், அனைத்து அரசியல் தலைவர்களும், முக்கிய பிரமுகர்கள் பலரும் நீண்ட வரிசையில் காத்திருக்கிறார்கள்.
இந்த நிலையில், ரத்தன் டாடாவின் மிக இளம் வயது உதவியாளர் என அறியப்படும் ஷாந்தனு நாயுடு, தனக்கு ஏற்பட்டிருக்கும் இழப்பை வார்த்தைகளால் வடித்துள்ளார்.
இந்த மிக அழகிய நட்பு தற்போது எனக்கு ஒரு வெற்றிடத்தை விட்டுச்சென்றிருக்கிறது. அந்த வெற்றிடத்தை நிரப்ப வாழ்நாள் முழுவதும் முயற்சிப்பேன். அதுதான், அவரது அன்புக்கு நான் கொடுக்க வேண்டிய விலையாக இருக்கும். என் அன்பான கலங்கரை விளக்கமே.. போய்வாருங்கள் என்று பதிந்துள்ளார்.
மேலும், உங்களின் ஞானம், கருணை மற்றும் அசைக்க முடியாத நம்பிக்கை எனது வாழ்க்கையை மட்டுமல்ல, எனது குணத்தையும் வடிவமைத்துச் சென்றுள்ளது. கருணை மற்றும் நேர்மையின் உண்மையான அர்த்தத்தை நீங்கள் எனக்குக் கற்றுக் கொடுத்தீர்கள். உங்களுடன் நெருங்கிப் பழகிய ஒவ்வொருவரின் வாழ்க்கையின் வழியாகவும் உங்கள் பண்பு நிச்சயம் வாழும்.
2014ல் தொடங்கி.. 2024ல்.. முடிந்தது
எளிமை மற்றும் அவரது நற்குணங்களால் மாமனிதன் என நாடே கொண்டாடும், மறைந்த ரத்தன் டாடா, சாந்தனு நாயுடுவுடனான நட்பு மிகவும் அழகானது, ஆழமானது. இது 2014ஆம் ஆண்டு தொடங்கியிருக்கிறது.
டாடா நிறுவனத்தில், இன்டெர்ன் முறையில் இணைந்திருந்த சாந்தனுவின் துடிப்பான செயல்கள் மற்றும் தனிச்சிறப்பு போன்றவை ரத்தன் டாடாவை அதிகம் கவர்ந்துவிட்டது.
சாந்தனு பொறியியல் மாணவராக இருந்த போது, கார்களில் தெரு நாய்கள் அடிபட்டு சாகாமல் இருக்கும் வகையில், எதிரொலிக்கும் ஒலி பிரதிபலிப்புகளை கார்களில் ஒட்டும் தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்திருந்தார். அப்போதுதான் இவர்களது நடபு தொடங்கியது.
இவருமே விலங்குகள் மீது குறிப்பாக நாய்கள் மீது கொண்டிருந்த அன்பு, இவர்களது நட்பு மேலும் நெருக்கமாக்கியது.
இந்த நட்பு குறித்து ஒரு ஆங்கில ஊடகத்துக்கு அவர் அளித்த பேட்டியில், சாந்தனுவும் நானும், தெரு நாய்கள் மீது கொண்டிருக்கும் ஒரே விதமான அக்கறை காரணமாக நெருங்கிப் பழகினோம். இவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து, தெரு நாய்களை பராமரித்து உணவளித்து அவற்றுக்கு தங்குமிடங்களை ஏற்படுத்திக்கொடுத்திருந்தார். அது எனக்கு மிகவும் பிடித்திருந்தது என்று ரத்தன் டாடாவே தெரிவித்திருந்ததாக செய்தி வெளியாகியிருந்தது.
இந்த நட்பு ஒன்றுதான் இருவருக்குள்ளும் இருந்த வயது வித்தியாசத்தைக் குறைத்து இரண்டு தலைமுறைகளுக்கு இடையே பாலமான மாறி மிக நெருங்கிய நண்பர்களாக மாற்றியது.
இன்று அந்த நட்பு தன்னை விட்டுப் போனதை தாங்கிக் கொள்ள முடியாமல், அவரது உடல் வைக்கப்பட்டிருக்கும் இடத்தில், தாயைத் தொலைத்த கைக்குழந்தையைப் போல துயருற்றுக் கிடக்கிறார் சாந்தனு நாயுடு.